கேரளாவின் அமைதியான ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த சதீஷ் மற்றும் ஆஷா சுரேஷ் தம்பதியினரின் வாழ்க்கை, வெளியில் பார்க்க அழகான குடும்பமாகத் தோன்றினாலும், உள்ளே மறைந்திருந்த இருண்ட ரகசியம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2006-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவர்களின் வாழ்க்கை, ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. சதீஷ், தனது கடின உழைப்பால் நல்ல வருமானம் ஈட்டி வந்தார். ஆனால், வேலையிழப்பு அவரை பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியது.

இதனைத் தொடர்ந்து, சொந்தமாக ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி, படிப்படியாக வெற்றியைப் பெற்றார். ஆனால், வெற்றியுடன் ஒரு மர்மமான உடல்நலப் பிரச்சினையும் அவரைப் பின்தொடர்ந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக, இரவு உணவு சாப்பிட்டவுடன் சதீஷுக்கு கடுமையான உடல் வலி, அசதி, மயக்கம் மற்றும் தூக்கம் தோன்றியது.
இதனை ஆரம்பத்தில் சர்க்கரை நோயின் அறிகுறியாக நினைத்த அவர், மருத்துவரை அணுகி சர்க்கரை வியாதிக்கு மருந்து எடுத்து வந்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. இரவு உணவு சாப்பிட்டவுடன் உறங்கி விடுவது அவருக்கு வாடிக்கையாக மாறியது.
மருத்துவரிடம் இந்த மயக்கப் பிரச்சினையைப் பற்றி கூறாததால், பிரச்சினை தொடர்ந்தது.சமீபத்தில், தொழில் காரணமாக சதீஷ் வீட்டில் இரவு உணவு சாப்பிட முடியாத சூழல் ஏற்பட்டது. வெளியில் ஹோட்டல்களில் உணவு சாப்பிட ஆரம்பித்தபோது, அவருக்கு மயக்கமோ, தூக்கமோ வரவில்லை. இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மறுநாள் வீட்டில் உணவு சாப்பிட்டபோது, மீண்டும் மயக்கம் வந்தது. ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த சதீஷ், மனைவி ஆஷாவுக்கு தெரியாமல் சமையலறையில் ரகசிய கேமரா பொருத்தினார். அதில், ஆஷா இரவு உணவில் எதோ சில மாத்திரைகளை நுணுக்கி பொடியாக்கி கலப்பதை கண்டு அதிர்ந்து போனார்.
இதனை தனது குடும்ப தோழியான வினோதினியிடம் பகிர்ந்தார் சதீஷ். வினோதினி, ஆஷாவை நாசுக்காக தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினார். அப்போது ஆஷா, அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தினார்.
“எனது கணவர் என்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார். அவரை கட்டுப்படுத்த, தினமும் இரவு உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்தேன். இதனால் அவர் அமைதியாக உறங்கி விடுவார், எனக்கு எந்த தொந்தரவும் இருக்காது,” என்று கூறினார்.
மேலும், இதே முறையை வினோதினிக்கும் பயன்படுத்த பரிந்துரைத்து, மாத்திரை வாங்கும் நபரின் விவரங்களையும் கொடுத்தார்.இந்த உரையாடலை வினோதினி செல்போனில் பதிவு செய்து, சதீஷுக்கு அனுப்பினார். தனது உடல்நலக் குறைவுக்கு காரணம் ஏழு ஆண்டுகளாக மனைவி கொடுத்து வந்த தூக்க மாத்திரைகள் என்பதை அறிந்து அதிர்ந்த சதீஷ், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர், ஆஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம், கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் திருமண உறவில், இத்தகைய மோசமான செயல் நிகழ்ந்திருப்பது, அனைவரையும் மனம் உடைந்து போகச் செய்துள்ளது.
இந்த வழக்கு மேலும் என்ன திருப்பங்களை கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Summary : In Kerala, Satheesh discovered his wife, Asha, was secretly mixing sleeping pills in his dinner for seven years, causing health issues. After noticing no drowsiness when eating out, he installed a hidden camera, uncovering the truth. Asha confessed to a friend, leading to her arrest.


