சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (ரயில் எண்: 20605) கடந்த ஆகஸ்ட் 30 அன்று பயணித்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவலரின் முறைகேடான நடவடிக்கைகளால் அவமதிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
மோகன்ராஜ், தனது தாய், அக்கா, மாமா மற்றும் குழந்தையுடன் ஆறு பேருக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுடன் பயணித்தார். ஆனால், அவரது தந்தை உடல்நலக் காரணங்களால் பயணிக்கவில்லை. இதனால், ஆறு டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட் பயன்படுத்தப்படவில்லை.

ரயிலில் வந்த டிக்கெட் பரிசோதகர் (டிடி), பயன்படுத்தப்படாத டிக்கெட்டை மற்றவர்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியதை மோகன்ராஜ் எதிர்த்து, அந்த இடத்தை தனது குடும்பத்தினர் (பெண்கள் மற்றும் குழந்தைகள்) பயன்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் சிதம்பரம் ரயில் நிலையத்தில் மோகன்ராஜ் மற்றும் அவரது மாமா மீது சட்டவிரோதமாக பயணித்ததாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ஆர்பிஎஃப் காவலர் பாபு, மோகன்ராஜையும் அவரது மாமாவையும் எந்தவித விசாரணையும் இன்றி ரயிலில் இருந்து சட்டையைப் பிடித்து இறக்கியதாகக் கூறப்படுகிறது. மோகன்ராஜின் தாய், அக்கா மற்றும் குழந்தை மற்றவர்கள் அதே ரயிலில் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மோகன்ராஜ் மற்றும் அவரது மாமா ஆகிய இருவரும் கொடுத்த புகாரில் காவலர் பாபு மது போதையில் இருந்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், காவலர் பாபு சரியான சீருடை அணியாமல், ஷூ இல்லாமல் இருந்ததாகவும், பெயர் பொறித்த பட்டையும் அணியவில்லை என்றும் மோகன்ராஜ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மோகன்ராஜையும் அவரது மாமாவையும் காவலர் பாபு மயிலாடுதுறை ஆர்பிஎஃப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு விசாரணைக்குப் பிறகு, இருவரும் மற்றொரு ரயில் மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை மோகன்ராஜ் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்த நிலையில், அது வைரலாக பரவியது.மோகன்ராஜ், காவலர் பாபு மது போதையில் பணியாற்றியதாகவும், தங்களை அநியாயமாக இறக்கியதாகவும் ஆன்லைனில் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சி ஆர்பிஎஃப் ஏகேசி பிரபோத நாயர், விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த சம்பவம், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
Summary : Mohanraj, traveling with family on the Chendur Express from Chennai to Tiruchendur, faced a dispute with a ticket examiner over an unused ticket. The examiner lodged a complaint, leading to RPF constable Babu forcibly removing Mohanraj and his uncle at Chidambaram without inquiry, sparking controversy.

