பென்சில்வேனியா, அக்டோபர் 21, 2025: "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது" என்பது சட்டரீதியான நீதியின் அடிப்படைத் தத்துவம். ஆனால், இந்த அடிப்படை மீறப்பட்டு 43 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய வம்சாவளி அமெரிக்கர் சுப்ரமணியம் சுபுவேதம் (சுபு) இப்போது விடுதலைக்குப் பின் நாடுகடத்தல் அச்சத்தால் பதறுகிறார்.
2025-இல் நிரபராதியாக நிரூபிக்கப்பட்டாலும், 19 வயதில் பதிவான போதைப்பொருள் வழக்கு அவரை இந்தியாவுக்கு திருப்பியழைக்கும் அடிப்படையாக மாறியுள்ளது. சுபுவின் குடும்பம் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய போராடி வருகின்றனர்.

சுபு, 1961-இல் இந்தியாவில் பிறந்தவர், 9 மாத குழந்தையாக இருக்கும் அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். அங்கு வளர்ந்து, படித்து, வேலை செய்த அவரது வாழ்க்கை 1983-இல் திடீரென திசைமாறியது.
தனது நண்பரை கொன்றதாகப் பொய்யான குற்றச்சாட்டில் 22 வயதில் கைது செய்யப்பட்ட சுபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆதாரமற்ற யூகங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த வழக்கு, பென்சில்வேனியாவின் வரலாற்றில் நீண்ட கால தவறான சிறைத்தண்டனையாகப் பதிவாகியுள்ளது.
"எந்த ஆதாரமும் இல்லை. தடயவியல் ரிப்போர்ட்கள், ஆயுதங்கள் எதுவும் இல்லை. போலீசு மறைத்த ஆதாரங்களைத் தோண்டியெடுத்தபோது உண்மை வெளிப்பட்டது," என்கிறார் பென்சில்வேனியா இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்டின் (Pennsylvania Innocence Project) பிரதிநிதிகள்.

2022-இல் இந்த அமைப்பு வழக்கில் தலையிட்டு, FBI அறிக்கைகள் மற்றும் பழைய குறிப்புகளை ஆய்வு செய்தது. துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு கூட சுபுவுடன் தொடர்பில்லை என்பது உறுதியானது. இதன் விளைவாக, 2025 ஜூலை மாதத்தில் நீதிமன்றம் சுபுவை நிரபராதியாக அறிவித்து விடுவித்தது.
64 வயது சுபு, பென்சில்வேனியா சிறைச்சாலையின் 150 ஆண்டு வரலாற்றில், சிறைவாசத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் நபராகவும், அதுவும் சிறந்த மதிப்பெண்களுடனும் புகழ்பெற்றார்.ஆனால், இந்த விடுதலையின் மகிழ்ச்சி குறுகியது.
சிறையிலிருந்து வெளியேறிய உடனேயே அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் (ICE) அவரைப் பிடித்து வைத்தனர். காரணம்? 19 வயதில் (1980) பதிவான சிறிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு. அப்போது அமெரிக்க குடியுரிமை இல்லாத சுபு, இந்த வழக்கின் காரணமாக நாடுகடத்தல் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

பின்னர் வந்த கொலை வழக்கு ஆயுள் தண்டனையால் நாடுகடத்தல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போது, நிரபராதியாக நிரூபிக்கப்பட்டாலும், ICE அதை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. "அவர் 'கேரியர் கிரிமினல்' (தொழில்முறை குற்றவாளி)" என முத்திரை குத்தி, இந்தியாவுக்கு நாடுகடத்துவதாக அறிவித்துள்ளனர்.
சுபுவின் வழக்கறிஞர் கூறுகையில், "கொலை வழக்கு நிரபராதியாக நிரூபிக்கப்பட்டது. போதை வழக்கு மட்டும் இருந்தால், அது மட்டுமே அவரை குற்றவாளியாக்காது. இது அநியாயம். நாடுகடத்தல் உத்தரவை ரத்து செய்ய விசாரணை தேவை," என்றார்.

குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். "அமெரிக்காவே அவரது சொந்த நாடு. 9 மாதத்தில் வந்தவர், இந்தியாவை அறிந்தே இல்லை. பழக்கவழக்கங்கள், சட்டங்கள் எல்லாம் அந்நியம். 64 வயசில் தனியாக இந்தியாவில் என்ன செய்வார்? வேலை, உறவினர்கள் எல்லாம் அங்கேயே," என்கிறார் சகோதரி. சுபுவின் நெருங்கிய உறவினர்கள் அமெரிக்கா, கனடாவில் தான் வசிக்கின்றனர். இந்தியாவில் உள்ளவர்கள் தூரத் தொடர்புகளே.
சிறையில் சுபு படிப்பில் சிறந்து விளங்கியதோடு, நூற்றுக்கணக்கான சிறைநிகளுக்கு ஆசிரியராக இருந்தார். அஞ்சல் வழி படித்து டிகிரி பெற்ற அவர், படிக்க, எழுத, படிப்பு முடிக்க உதவியது பெரும்பாடு. "இளமை முழுவதும் சிறையில் வீணானது.

இப்போது சுதந்திரத்தைப் பறிப்பது கொடூரம்," என்கிறார் குடும்பம். அவர் ஸ்மார்ட்போன், இன்டர்நெட், பயணங்கள் எதையும் அறியாதவர். வெளியுலகம் அவருக்கு புதிது.
இந்த வழக்கு அமெரிக்காவின் குடியேற்ற சட்டங்களின் கடுமையையும், தவறான தண்டனையின் நீண்ட விளைவுகளையும் வெளிப்படுத்துகிறது. சுபுவின் போராட்டம் தொடர்கிறது. நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யுமா? அவரது மீதி வாழ்க்கை அமெரிக்காவிலேயே அமையுமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Summary : Indian-origin American Subbiah Vedam spent 43 years in Pennsylvania prison for a baseless murder conviction. Exonerated in 2025 at age 64, he faces immediate deportation to India due to a minor 1980 drug charge, as he lacks US citizenship. His family and lawyers fight the cruel twist, seeking to let him rebuild in his lifelong home.


