சேலம், அக்டோபர் 26 : தமிழ்நாட்டை உலுக்கிய பட்டபகல் வழிப்பறி வீடியோவில் மறைந்திருந்த உண்மை இன்று வெளியானது. இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை ஆபாச சாட்சிங் செய்து பிளாக்மெயில் செய்த இளைஞரை தடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், சம்பவத்தின் மெயின் 'வில்லன்' என்று கூறப்படும் பிரம்மநாயகம் என்பவர் பொய் புகார் கொடுத்துவிட்டு தப்பி ஓடியது போலீஸ் செயல்பாட்டில் கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தைகள் நல ஆர்வலர்கள், 'போக்சோ' சட்டத்தின் கீழ் அவரை ஏன் கைது செய்யவில்லை என விமர்சித்துள்ளனர்.

வைரல் வீடியோவின் தொடக்கம்: 'அப்பாவி'யின் புகார்
சேலம் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தில் அக்டோபர் 25 அன்று காலை 7 மணிக்கு நடந்த சம்பவம். மூன்று இளைஞர்கள் ஒரு இளம் ஆணை தாக்கி, அவரது செல்போனை பறித்து ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
தாக்கப்பட்டவர், தன்னை 'அப்பாவி'யாக சித்தரித்து, "திருநெல்வேலி நண்பர் கூப்பிட்டதாக வந்தேன். பாலத்துக்கு வந்ததும், 'கூல் லிப்' இருக்கா? 'ஹான்ஸ்' இருக்கா? என கேட்டு, அடித்து போனை பறித்தனர்" என கூறினார். இந்த வீடியோ நெட்டிசன்களை பரபரப்படுத்தியது.
"பட்டபகலில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதா?" என விவாதங்கள் எழுந்தன.பொதுமக்கள் வீடியோ எடுத்து போலீஸிடம் புகார் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதால், தாக்கப்பட்டவர் புகார் அளித்தார். சேலம் மாநகர காவலர் அணில்குமார் கிரியின் உத்தரவுப்படி, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 5 மணி நேரத்தில் மூன்று இளைஞர்களை கைது செய்யப்பட்டனர்.
அவர்கள்: அம்மாப்பேட்டை அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனி சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ராமகிருஷ்ணன், அவரது நண்பர் பிரதீப் ராஜா, மற்றும் 17 வயது சிறுவன்.
விசாரணையின் திடீர் ட்விஸ்ட்: பிளாக்மெயில் விவகாரம்!
விசாரணையில் உண்மை வெளியானது. இது வழிப்பறி அல்ல... சிறுமியை பாதுகாக்கும் 'நீதி நடவடிக்கை'! ராமகிருஷ்ணன் வாக்குமூலத்தில் கூறியது: "கடந்த ஒரு வருடமாக என் தோழி (சிறுமி) ஒருவருடன் நட்பு.
அவளை திருநெல்வேலி சுரேஷ் அலியாஸ் பிரம்மநாயகம் என்பவர் இன்ஸ்டாகிராமில் ஆபாச சாட்சிங் செய்து, அந்தரங்க புகைப்படங்களை பெற்று பிளாக்மெயில் செய்தார். பல ஐடிகளில் தொடர்ந்து டார்ச்சர் செய்தார். தோழி என்னிடம் அழுது சொன்னார்.
அவரது போனை பறித்தால் மட்டுமே சான்றுகளை அழிக்க முடியும் என முடிவு. எனவே, நண்பர்களுடன் போலி பெண் இன்ஸ்டா ஐடி உருவாக்கி, பிரம்மநாயகத்துடன் சாட்சிங் செய்தோம். அவர் நம்பி, நெல்லையிலிருந்து (சென்னையில் வசிப்பவர்) சேலத்துக்கு வந்தார்.
புதிய பேருந்து நிலையம் அருகே பாலத்துக்கு வரச் செய்து, போனை பறித்து உடைத்து, எச்சரிக்கை அளித்தோம். இனி தோழியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதற்காகவே இது."போலீஸ் பத்திரிக்கை குறிப்பின்படி,
தாக்குதலின் நோக்கம்: சிறுமிக்கு அனுப்பிய தகாத செய்திகள்-புகைப்படங்களை நீக்குவது, மேலும் தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது.மெயின் குற்றவாளி தப்பினது ஏன்? போக்சோ சட்டம் என்ன ஆகும்?ஆனால், பிரம்மநாயகம்? அவர் பொய் புகார் (வழிப்பறி) கொடுத்துவிட்டு, உண்மை பெயரை மறைத்த சொந்த ஊருக்கு தப்பி ஓடினார்.
சேலம் மாநகர காவலர் அணில்குமார் கிரி செய்தியாளர்களிடம்: "இது பணம் அல்லது போதை தொடர்பானது அல்ல. சிறுமி சம்பந்தப்பட்டது. பிரம்மநாயகம் புகார் கொடுத்து போய்விட்டார்.
அவரது பெயர் விசாரணையில் தான் தெரிந்தது. கூடுதல் விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.இதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் விமர்சனம். "மாணவர்களின் வாக்குமூலத்தில் உண்மை தெரிந்தால், போக்சோ சட்டத்தின் கீழ் (பாலியல் குற்றங்கள் - குழந்தைகள் பாதுகாப்பு) பிரம்மநாயகத்தை உடன் கைது செய்யலாம்.
சிறுமி புகார் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. போலீஸ் அலட்சியமாக செயல்பட்டு, உண்மை குற்றவாளியை தப்பவிட்டது ஏன்? இது சமூகத்தில் பெண்கள்-சிறுமிகளுக்கு பாதுகாப்பின்மை உணர்த்துகிறது" என அவர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் விவாதம்: யார் 'ஹீரோ'?
நெட்டிசன்கள்: "மாணவர்கள் சிறுமியை காப்பாற்றினர், ஆனால் போலீஸ் தவறான பக்கம் திரும்பியது!" என ஆதரவு. மறுபக்கம், "சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது" என எச்சரிக்கை.
சம்பவம், கிரைம் திரைப்படங்களை போல ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து, சமூகத்தில் பாலியல் தொந்தரவு, சட்ட அமலாக்கம் குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
போலீஸ் தெரிவித்தது போல், விசாரணை தொடர்கிறது. பிரம்மநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? சிறுமியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? இந்தக் கேள்விகளுக்கு விரைவான பதில் வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English : A viral Salem robbery video exposed a twist: Students attacked a blackmailer to delete explicit Instagram content targeting a minor girl. Victim Brahminayagam filed false FIR and escaped; police nabbed students but spared him under POCSO, drawing flak for bias.