செங்கல்பட்டு, நவம்பர் 19 : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சரண், தனது 19 வயது காதல் மனைவி மதுமிதாவை சந்தேகத்தால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை, கொடூர கொலையில் முடிவடைந்தது. சரண், தாலி செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு, கஞ்சா கடத்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம், சூனாம்பேடு, மாகரல், சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு முன்பு சிறை சென்று வெளியே வந்திருந்த சரண், தனது சொந்த ஊரைச் சேர்ந்த மதுமிதாவை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இருவரும் அண்டை வீட்டினர் என்பதால், அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர். இருவரின் காதல் விவகாரம் மதுமிதா குடும்பத்தினருக்குத் தெரியவந்ததும், அவர்களை கண்டித்துள்ளனர். இதனால், நான்கு மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்துகொண்டு, அச்சரப்பாக்கம் அருகே உள்ள உரத்தி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவத்தின் பின்னணியில், மதுமிதா ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி செல்போனில் பேசியதாக சரண் சந்தேகமடைந்தார். இதனால் அவரை ரகசியமாக கண்காணித்து வந்த சரண், நேற்று மாலை மதுமிதாவை கோயிலுக்கு செல்லலாம் எனக் கூறி ஆனந்தமங்கல மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, ஆண் நண்பருடன் பேசியது குறித்து கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரண், முன்னரே திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தியால் மதுமிதாவை வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தார். கொலை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இரவு 9 மணி அளவில் சரண் தனது தாயாருக்கு போன் செய்து சம்பவத்தைத் தெரிவித்தார்.
பயந்துபோன அவர், மதுராந்தகம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். உடனடியாக உரத்தி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் சென்றது. செல்போன் சிக்னல் மூலம் சரணின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த போலீசார், இரவோடு இரவாக அவரை கைது செய்தனர்.
மதுமிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதல் திருமணம் செய்த சில மாதங்களிலேயே மனைவியை கொன்ற சம்பவம், மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary in English : In Chengalpattu district, near Maduranthakam, 24-year-old Saran, a criminal with a history of chain snatching, bike theft, and drug trafficking, murdered his 19-year-old wife Madhumitha by slitting her throat due to suspicions of her talking to another man. The couple, who eloped and married four months ago despite family opposition, lived in Urathi village. Saran was arrested after confessing to his mother.


