ராமநாதபுரம், நவம்பர் 19: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் - சுசீலா தம்பதியினரின் மூத்த மகள் ஷாலினி (வயது 17).
ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த இவர், பள்ளிக்கு செல்லும் வழியில் ஒருதலை காதலித்த இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முனியராஜ் (முனிராஜ்), கடந்த சில மாதங்களாக ஷாலினியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். பலமுறை காதலை ஏற்குமாறு வற்புறுத்தியும் ஷாலினி மறுத்து வந்தார்.
இது குறித்து ஷாலினி தனது தந்தை மாரியப்பனிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாரியப்பன் முனியராஜின் வீட்டுக்குச் சென்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ், நேற்று (நவம்பர் 19) காலை ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் வழிமறித்து மீண்டும் காதலை வற்புறுத்தியுள்ளார்.
ஷாலினி ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த முனியராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு முனியராஜ் நேரடியாக ராமேஸ்வரம் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.
தனது காதலை ஏற்க மறுத்ததாலேயே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் துறைமுக காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஷாலினியின் உடலை மீட்டு, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முனியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஷாலினியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி ராமேஸ்வரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இக்கொலை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கருத்து:
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராமேஸ்வரம் மாணவி கொலை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். "இன்று நடந்ததா? பள்ளிக்கு வெளியில் நடந்த சம்பவம் என்று கூறுகிறீர்கள்.
காரணம் என்னவென்று தெரியவில்லை. மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்ததும் விசாரணை நடத்தப்படும். பள்ளிக்குள் நடந்திருந்தால் நடவடிக்கை வேறு. முழு விசாரணைக்குப் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஒருதலை காதல் தொல்லைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Summary in English : In Rameshwaram, a 17-year-old Plus Two student Shalini was brutally murdered by 21-year-old Muniraj who slit her throat after she rejected his one-sided love proposal on her way to school. The accused was arrested. Relatives protested demanding strict punishment. School Education Minister Anbil Mahesh expressed shock and ordered inquiry.

