பிரம்படியை விட ஆபத்தான செயலை செய்த 3 ஆசிரியைகள்.. 9ம் வகுப்பு மாணவி கோர முடிவு.. கொடூர சம்பவம்..

கோயம்புத்தூர், நவம்பர் 21: கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி முத்து சஞ்சனா (வயது 14), பள்ளி ஆசிரியர்களின் தொடர் அவமானம் மற்றும் உளவியல் துன்புறுத்தலால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய ஆசிரியர்கள், மாணவியை கேலி செய்து அவமானப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மூன்று ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்து சஞ்சனா, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் பள்ளிக்கு சென்றபோது, தலைமுடியை வாரி சீவியிருந்ததைப் பார்த்து, ஆங்கில ஆசிரியை ஷயாமலாதேவி, "நீ என்ன கிழவியா? இப்படி தலை சீவிகிட்டு வந்திருக்க" என்று 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாக மாணவி தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மற்ற மாணவர்கள் கேலியாக சிரித்ததால், தனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஆசிரியை ஷயாமலாதேவியின் துன்புறுத்தல் இத்துடன் நிற்கவில்லை. அடுத்த நாள், "காய்ச்சல் வரலையே, இன்னும் உனக்கு வந்துட்டா?" என்று மீண்டும் கேலி செய்ததாகவும், தொடர்ந்து இதுபோன்ற வார்த்தைகளால் அவமானப்படுத்தியதாகவும் மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நன்றாகப் படிக்கும் முத்து சஞ்சனாவை, "ஸ்லோ லேர்னர்ஸ்" (மெதுவாகக் கற்பவர்கள்) என்று கூறி, அத்தகைய மாணவர்களுடன் உட்கார வைத்து எழுதச் செய்ததாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். "நான் ஸ்லோ லேர்னர் இல்லை, நான் நல்லா படிக்கிற பொண்ணு. மேக்ஸ் சார் கூட சொன்னாரு," என்று மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இத்தகைய துன்புறுத்தல்கள் ஆங்கில ஆசிரியருடன் மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ் ஆசிரியை ரமணிபாய், மாணவி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தபோது, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறியதற்கு, அவரை முட்டி போட வைத்து, "நீயே உன்னை ஏமாத்திக்கிறேன்" என்று திரும்பத் திரும்ப சொல்லச் செய்து துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், கண்ணத்தில் நான்கு அல்லது ஐந்து முறை அறைந்து உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் மாணவி கூறியுள்ளார். அறிவியல் ஆசிரியை சிந்து, "நீ நல்லாவே படிக்கல. போன தடவை விட இந்த தடவை மார்க் கம்மி. பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்ல உங்க அம்மா கிட்ட சொல்ல போறேன்" என்று மிரட்டியதாகவும், இதனால் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் தனது தாயார் வந்தால், தன்னைப் பற்றி தவறாகச் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் தவறான முடிவு எடுத்ததாகவும் மாணவி மரணத்திற்கு முன் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து உளவியல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி, மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார். சிகிச்சை பலனின்றி 19-ஆம் தேதி உயிரிழந்தார். மருத்துவமனையில் அவர் கொடுத்த மரண வாக்குமூலம், பெற்றோர்களை கலங்கச் செய்துள்ளது.

வாக்குமூலத்தில், "இங்கிலீஷ் மிஸ் வந்து என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாங்க" என்று கூறி முடித்துள்ளார். உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போலீசார் ஆங்கில ஆசிரியை ஷயாமலாதேவி, தமிழ் ஆசிரியை ரமணிபாய், அறிவியல் ஆசிரியை சிந்து ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம், பள்ளிகளில் ஆசிரியர்களின் நடத்தை குறித்து பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சில ஆசிரியர்கள், மாணவர்கள் மீது கோபம் கொண்டால் சக ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டு கூட்டாக துன்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

உளவியல் தாக்குதல், உடல் தண்டனையை விட ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சமுத்திரக்கணி நடித்த 'சாட்டை' திரைப்படம் போன்றவை, ஆசிரியர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

"ஆசிரியர்களுக்கு தேவை பிரம்பு அல்ல, சாட்டைதான்" என்று கூறும் அவர்கள், கட்டுப்பாடற்ற அதிகாரம் குற்றத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். இச்சம்பவம், பள்ளிகளில் மாணவர்களின் உளவியல் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Summary in English : In Valparai Government Higher Secondary School, Coimbatore, 14-year-old ninth-grader Muthu Sanjana died by wrong decision after enduring psychological harassment from three teachers. English teacher Shyamaladevi humiliated her publicly over her hairstyle and labeled her a slow learner. 

Tamil teacher Ramanibai forced her to kneel, slapped her, and verbally abused her for missing homework. Science teacher Sindhu threatened to report low marks to her parents. Police have filed cases against the teachers and are investigating the incident.