திருப்பதி போறீங்களா..? இனி இதற்கெல்லாம் தடை.. தேவஸ்தானம் போட்ட அதிரடி உத்தரவு.. என்ன காரணம்..?

திருப்பதி, நவம்பர் 8, 2025 : திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD) நிர்வாகம், திருமலையில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், மஞ்சூரியன் போன்ற துரித உணவுகளுக்கு நிரந்தர தடை விதிக்கும் என அறிவித்துள்ளது.

இந்த தடை, பக்தர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், பாரம்பரிய சைவ உணவுகளை ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சைனீஸ் ரக உணவுகள் உள்ளிட்ட அனைத்து துரித உணவுகளும், அவை சைவமானாலும் திருமலையில் அனுமதிக்கப்படாது.

நேற்று நடைபெற்ற தேவஸ்தானத்தின் மாதாந்திர நிர்வாக கூட்டத்தில் இந்த முடிவு விவாதிக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில், திருமலையின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சாப்பாடு, சாம்பார், தோசை, இட்லி, களி, பொங்கல், தயிர் சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தக்காளி சாதம் போன்ற பாரம்பரிய சைவ உணவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

TTD கூடுதல் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் இதுகுறித்து விளக்கமளிக்கையில், "மேலும் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், மஞ்சூரியன் போன்ற உணவு வகைகள் கெட்டுப் போய்விட்டதா இல்லையா என்பதை சாப்பிடும் போது கண்டறிவது சிரமமாக இருக்கிறது. இதனால் அதனை சாப்பிடுபவர்கள் பல்வேறு உடல் நல உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.

குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். காரணம், நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், மஞ்சூரியன் போன்றவற்றில் தக்காளி சாஸ், சோயா சாஸ் என பல்வேறு சாஸ்கள் கலக்கப்படுகிறது.

இவை பதப்படுத்தப்பட்ட உணவுகளாக இருக்கின்றன. மேலும், நாவின் சுவை அரும்புகளை சரியாக செயல்பட விடாமல், அதனுடைய சுவையை கூடுதலாக காட்டி, உணவு கெட்டுப் போய்விட்டதா இல்லையா என்ற அறிகுறியை அதனை சாப்பிடுபவர்களுக்கு வழங்குவது இல்லை" என்றார்.

அவர் தொடர்ந்து கூறினார், "நம்முடைய பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, சாம்பார், பொங்கல் மற்றும் தயிர் சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தக்காளி சாதம் என எப்படி இருக்கக்கூடிய நம்முடைய பாரம்பரிய உணவுகள் கெட்டுப் போய்விட்டால், உடனடியாக நம்முடைய நாவின் சுவை அரும்புகளுக்கு உடனடியாக அதனுடைய சுவையின் மூலம் தெரிவித்து விடும். இதனால் அந்த உணவை சாப்பிடாமல் பக்தர்கள் தவிர்த்து விடுவார்கள்.

இப்படி திருமலை திருப்பதிக்கு எம்பெருமானை தரிசித்து வரக்கூடிய பக்தர்கள் உடல்நல உபாதைகளுக்கு ஆளாக கூடாது என்ற நோக்கத்திற்காகவே இந்த துரித உணவுகளை தடை செய்கிறோம். எனவும், பல இடங்களில் இப்படியான துரித உணவுகள் அதிகப்படியான எண்ணெய் சேர்த்து சமைக்கப்படுவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். எனவே, இது போன்ற துரித உணவுகள் மற்றும் சைனீஸ் ரக உணவுகளுக்கு திருமலை திருப்பதியில் நிரந்தரமாக தடை விதிக்கிறோம். அவை சைவமாக இருந்தாலும் அவற்றுக்கு திருமலையில் அனுமதி கிடையாது" என்று தீர்க்கமாக தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். "கோவில் சூழலில் பாரம்பரிய உணவுகளை மட்டும் வழங்குவது சரியானது. இது நம் கலாசாரத்தையும், உடல்நலத்தையும் பாதுகாக்கும்" என பக்தர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, மே மாதத்தில் TTD, திருமலையில் சீன உணவுகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய உணவுகளை மட்டும் விற்கவும், ஊழியர்கள் பாரம்பரிய உடைகளை அணிவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிரந்தர தடை, திருமலையின் புனித சூழலை பராமரிக்கவும், பக்தர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை உறுதி செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு TTD அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Summary : Tirumala Tirupati Devasthanams (TTD) has imposed a permanent ban on fast foods like noodles, fried rice, and Manchurian in hilltop eateries, even if vegetarian, to safeguard devotees' health.

These processed items, laden with sauces and excess oil, mask spoilage, causing illnesses such as diarrhea and vomiting, particularly among children and women. Traditional South Indian dishes like idli, dosa, and pongal naturally signal spoilage via taste, promoting cultural preservation and well-being.