தூத்துக்குடி, நவம்பர் 21: திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் குழந்தை இல்லாததை காரணம் காட்டி கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் மனமுடைந்த இளம் பெண் ஜெமீலா (வயது 25), தனது தாய் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த தஸ்னேவிஸ் - ராஜேஸ்வரி தம்பதியின் ஒரே மகள் ஜெமீலா. தந்தை இறந்த பிறகு தாய் ராஜேஸ்வரி சிறிய பெட்டிக்கடை நடத்தி மகளை பி.காம் வரை படிக்க வைத்தார். காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெனோ (28) என்பவருடன் ஜெமீலா சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தார்.
இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2023 செப்டம்பர் 17-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு ஜெமீலா, கணவர் பெனோ, மாமனார் லீனஸ், மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தார். அருகே பெனோவின் அக்கா ஜெனிட்டா - சுதர்சன் தம்பதியும் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
பெனோ மீன்பிடித் துறைமுகத்தில் மீன் ஏலம் கூறும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணத்துக்குப் பிறகு ஜெமீலாவுக்கு மூன்று முறை கரு உண்டாகி கலைப்பு ஏற்பட்டது.
இதை வைத்து கணவரது குடும்பத்தினர் “குழந்தை பெற்றெடுக்க முடியாதவில்லை” என தொடர்ந்து குத்திக்காட்டி பேசியதாகவும், மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பெனோ வேலையை விடுவிட்டு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு சுமார் 5 லட்சம் ரூபாய் இழந்தார்.
அந்தப் பணத்தை ஜெமீலாவின் 5 பவுன் தங்க நகையை அடகு வைத்தே திருப்பிக் கட்டியதாகத் தெரிகிறது. மேலும் வீட்டை மாமனார் லீனஸ் மற்றொரு மகள் புனிதாவுக்கு எழுதி வைத்துவிட்டதால் “குழந்தை இல்லாதவர்களுக்கு சொத்தில் பங்கு இல்லை”, "குழந்தையே இல்லை, சொத்து மட்டும் எதுக்கு..?" எனக் கூறி வீட்டைக் காலி செய்யும்படி மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பெரியவர்கள் முன்பு பலமுறை பேச்சுவார்த்தையும் நடந்தது. மகப்பேறு மருத்துவர்கள் அறிவுரைப்படி உடல்நிலை கருதி மூன்று மாதங்கள் பிரிந்திருக்க வேண்டும் எனக் கூறியதால் ஜெமீலா சில நாட்களாக தாய் வீட்டில் தங்கியிருந்தார். இரவு நேரங்களில் பெனோ ரகசியமாக வந்து பார்த்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 21) அதிகாலை தாய் வீட்டில் தாய் ராஜேஸ்வரி உறங்கிக் கொண்டிருக்கும் போது சமையலறையில் தூக்கிட்டு ஜெமீலா தற்கொலை செய்து கொண்டார். அருகில் ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தில் ஜெமீலா எழுதியது (முழு உரை):
“காதலித்து திருமணம் செய்து கொண்ட பெனோவுக்கு என்னைவிட அவர் சகோதரிகள் குடும்பம் தான் மிகவும் பிடித்திருக்கு.
இனிமேல் அவருடன் சென்று குடும்பம் நடத்தினாலும் நிம்மதியாக இருக்க முடியாது. உங்களை விட்டுட்டு இப்படி நான் பண்ண கூடாது ஆனால் என்னால் முடியவில்லை அம்மா. கணவர் பெனோ வீட்டில் அவர்கள் பண்ணுவது தான் சரி, நான் தப்புன்னு சொல்றாங்க. அவங்க என்ன பேசினாலும் நான் கேட்டுகிட்டு இருக்கணும் அப்படின்னு எதிர்பார்க்கிறார்கள்.
அம்மா நான் திரும்பப் பெனோ வீட்டுக்கு போனாலும் என்னை நிம்மதியாக வாழ விட மாட்டாங்க அம்மா. என்னை மன்னித்துவிடு. நான் உன்னை விட்டு செல்கிறேன். என்னுடைய நகைகளை வாங்கி இருக்கும் கடனை அனைவருக்கும் கொடுத்துவிட்டு நீயும் என்னுடன் வந்துவிடு. நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன்.”
சம்பவம் தெரிந்து தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெமீலாவின் தாய் ராஜேஸ்வரி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “என் மகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக” கணவர் பெனோ, மாமனார் லீனஸ், மாமியார் (பெயர் குறிப்பிடப்படவில்லை), அக்கா ஜெனிட்டா, நாத்தனார் கணவர் சுதர்சன் ஆகியோர் மீது நடவடிக்கை கோரியுள்ளார்.
மறுபுறம் பெனோவின் உறவினர்கள், “இருவரும் காதலித்து திருமணம் செய்து நன்றாகவே இருந்தனர். சிறு சிறு பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தற்கொலை அவர்கள் தாய் வீட்டில் நடந்துள்ளது. எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” எனக் கூறுகின்றனர்.
கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகளும் ஜெமீலாவின் தாயிடமும் உறவினர்களிடமும் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் குழந்தை இல்லை எனும் ஒற்றைக் காரணத்துக்காக இளம் பெண் ஒருவர் இவ்வளவு கொடூர மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Thoothukudi, 25-year-old Jemeela, married for two years, died by suicide at her mother's house after prolonged mental harassment from her husband Beno and in-laws over childlessness following three miscarriages. She left a heartbreaking suicide note blaming the family for constant humiliation and favouritism towards his sisters.

