போட்டி தொழில் செய்வதை பொறுக்காததால், முன்னாள் பெண் ஊழியருக்கு தினமும் நூற்றுக்கணக்கான கேஷ் ஆன் டெலிவரி (COD) பார்சல்களை ஆபாச புனைப்பெயர்களுடன் அனுப்பி தொல்லை கொடுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், 2023-இல் புளியகுளத்தில் உள்ள ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றினார்.
பின்னர் அந்த நிறுவனத்தை விட்டு விலகி, சொந்தமாக அதே தொழிலை தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நிறுவன உரிமையாளர் கோவை புதூரைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார் (39), கடந்த சில மாதங்களாக அந்தப் பெண்ணின் முகவரிக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட COD பார்சல்களை ஆர்டர் செய்துள்ளார்.

பார்சல்களில் அந்தப் பெண்ணின் பெயருடன் ஆபாசமான புனைப்பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள் போனில் அழைத்து அந்த ஆபாச பெயர்களை உரக்கக் கூறி, பார்சலை வாங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் போன் அழைப்புகள் தொடர்ந்து வந்ததால், அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், IP முகவரி மூலம் விசாரணை நடத்தினர். பல்வேறு இடங்களில் இருந்து ஆர்டர்கள் செய்யப்பட்டிருந்ததால், தொழில்நுட்பம் தெரிந்தவரே இதைச் செய்திருக்க முடியும் எனக் கண்டறிந்தனர்.
பின்னர் அந்தப் பெண்ணின் முந்தைய நிறுவன உரிமையாளர் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போட்டி தொழிலை தாங்கிக்கொள்ள முடியாமல் இத்தகைய கொடூரமான தொல்லை கொடுத்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : In Coimbatore, a digital marketing firm owner, S. Sathish Kumar (39), was arrested by cybercrime police for harassing his former female employee (aged 30) by ordering over 100 cash-on-delivery parcels daily with obscene pseudonyms added to her name, after she quit in 2023-2024 and started her own competing business, causing her severe distress.


