திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அனுப்பம்பட்டு பகுதியில் இயங்கும் சேயோன் பிரைமரி அண்ட் நர்சரி தனியார் பள்ளியில், கணிதப் பாடத்தில் தவறு செய்ததாகக் கூறி 10 வயது மாணவியை (5ஆம் வகுப்பு) தலைமை ஆசிரியரும் பள்ளி தாளாளருமான அருளதாஸ் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் தாயார் கலைவாணி கூறுகையில், "கணித சம்ஸ் (மேத்ஸ்) தெரியுமா என்று ஆசிரியர் கேட்டார். தெரியாது என்று மகள் சொன்னால் ஒரு அடி மட்டும் அடிப்பேன், தவறாக சொன்னால் 20 அடி அடிப்பேன் என்று மிரட்டினார்.

அதனால் தெரியாது என்று சொன்னதும், 'தெரிந்தும் தெரியாது என்று பொய் சொல்கிறாயா' என்று கோபமடைந்து முதுகில் ரத்தக் காயங்கள் ஏற்படும் அளவுக்கு அடித்தார். 'விட்டுவிடுங்கள் சார், விட்டுவிடுங்கள் சார்' என்று மகள் கதறியும் விடவில்லை. 'வாயை மூடு, சத்தம் வரக்கூடாது' என்று கூறியும் அடித்தார்" என்றார்.
சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவி உடல் வலி காரணமாக சாப்பிடாமல், பை தூக்க முடியாமல் தவித்துள்ளார். வீட்டில் ஆடை மாற்றும் போது முதுகு முழுவதும் சிவந்து ரத்தக் காயங்களுடன் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ அறிக்கை (MLC) அடிப்படையில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆசிரியர் அருளதாஸ் தரப்பில், "வெறும் 2 அடிகள் மட்டுமே அடித்தேன். குழந்தையை கண்டிக்க பெற்றோரே கேட்டுக்கொண்டனர். காயங்கள் மறுநாளே சரியாகிவிட்டன. புகார் வாபஸ் வாங்கப்பட்டது" என்று கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் செல்வாக்கு பயன்படுத்தி புகாரை வாபஸ் வாங்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இருப்பினும், மாணவி பள்ளிக்கு செல்ல அச்சப்படுவதால், தாயார் கலைவாணி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் அளித்துள்ளார். "காவல் நிலையத்தில் தனிஆளாக இருந்ததால் அழுத்தம் கொடுத்து வாபஸ் வாங்க வைத்தனர். ஆனால் கலெக்டர் புகாரை வாபஸ் பெறவில்லை.
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உறுதியாக தெரிவித்தார்.இச்சம்பவம், சிறுவர்கள் மீது ஆசிரியர்கள் வன்முறை செலுத்துவது குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தல் மற்றும் வன்முறை குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் என்பதால், பள்ளியில் மற்ற மாணவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.In
Summary in English : Thiruvallur district, Tamil Nadu, a 10-year-old fifth-grade girl was beaten by school headmaster Arul Das for a math mistake, causing severe back injuries.


