தர்மபுரி, டிசம்பர் 16 (செவ்வாய்க்கிழமை) : வாகன ஓட்டிகளால் "மரணச்சாலை" என்று அச்சத்துடன் அழைக்கப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
அதிக சுமை ஏற்றப்பட்ட லாரியின் பிரேக் பழுது மற்றும் உரிமையாளரின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த இந்த சங்கிலித் தொடர் விபத்து, அப்பகுதி வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரூரைச் சேர்ந்த விஜய்க்கு சொந்தமான லாரி, மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் இருந்து கோழித் தீவன மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தது.

கர்நாடக எல்லையைக் கடந்து தமிழகத்தில் நுழைந்து, ஆபத்தான தொப்பூர் கணவாய் இறங்குமுகச் சாலையில் சென்றபோது லாரியின் பிரேக் பிடிக்காமல் போனது. ஓட்டுநர் முனியப்பன் (45, நாமக்கல் மாவட்டம் நடுக்கரப்பட்டி) லாரியைக் கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியடைந்தார். மாற்று ஓட்டுநர் வீரா (ஈரோடு) ஓடும் லாரியில் இருந்து தாவிக் குதித்து உயிர் தப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்த லாரி முதலில் முன்னால் சென்ற ஈஷர் கண்டெய்னர் சரக்கு வாகனத்தின் மீது மோதியது. அதைத் தவிர்க்க முயன்ற ஈஷர் வாகனம் வலது பக்கம் விலகியபோது எதிர்திசையில் வந்த ஃபோர்டு கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் சுழன்று சென்று ஒரு ஆம்னி வேன் பின்புறம் மோதியது.
தொடர்ந்து தரிக்கெட்டு சென்ற லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தையும் மோதி, சாலைத் தடுப்புக் கம்பிகளை உடைத்து உருக்குலைந்து நின்றது. இந்தக் கோர விபத்தில் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த தம்மணம்பட்டியைச் சேர்ந்த அருணகிரி (38), அவரது அக்கா கலையரசி (40), தினேஷ் (30, பேத்தநாயக்கன்பாளையம்) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
லாரி ஓட்டுநர் முனியப்பன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் சிலர் பலத்த காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சதீஷ், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியதுடன், விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதிக சுமை ஏற்றப்பட்டதும், லாரியின் பிரேக் ஏற்கனவே பழுதடைந்திருந்ததும் தெரியவந்தது. மாற்று ஓட்டுநர் வீரா விசாரணையில், "மகாராஷ்டிராவுக்குச் செல்லும்போதே பிரேக் பழுது இருப்பதாக உரிமையாளரிடம் தெரிவித்தோம். 'முன்னால் போய் வந்த பிறகு சரிசெய்துகொள்ளலாம்' என்று அனுப்பிவைத்தார்" என்று கூறினார்.
லாரி உரிமையாளர் விஜயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பராமரிப்புச் செலவை மிச்சப்படுத்த நினைத்த உரிமையாளரின் மெத்தனம் காரணமாக சம்பந்தமே இல்லாத நான்கு உயிர்கள் அநியாயமாகப் பறிபோயின என்று போலீசார் தெரிவித்தனர்.
அதிக சுமை ஏற்றுதல், வாகன பராமரிப்பின்மை போன்றவை பெரும் விபத்துகளுக்கு வழிவகுப்பதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு உதாரணம் என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர்.
தொப்பூர் கணவாய் சாலை அடிக்கடி விபத்துகளால் பாதிக்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Summary in English : In Dharmapuri's Thoppur Ghat, a heavily loaded lorry from Maharashtra lost brakes on the steep descent, triggering a chain-reaction accident. The out-of-control vehicle rammed multiple vehicles, killing four people: three on a two-wheeler and the lorry driver. The cleaner jumped to safety. Brake failure, known to the owner, caused the tragedy.


