ஜபல்பூர், டிசம்பர் 10 : மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த ரிஷப் ராஜ்பூத் மற்றும் சோனாலி ஆகியோர், 11 ஆண்டுகள் காதலித்த பிறகு, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் பாரம்பரிய முறையில் நவம்பர் 23-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தபோது, வாழ்த்துகள் ஒருபுறம் இருந்தாலும், ரிஷப்பின் நிறத்தை காரணம் காட்டி சில நெட்டிசன்கள் உருவ கேலி செய்து மீம்ஸ் பகிர்ந்துள்ளனர். இது தம்பதியருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, தம்பதியர் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஆனால், சிலர் "மாப்பிள்ளை அரசு அதிகாரியாக இருப்பார் அல்லது அமைச்சரின் மகனாக இருப்பார் போல" என்று கிண்டலடித்து கருத்துகள் பதிவிட்டனர்.

மற்றொரு பக்கம், ரிஷப்பின் தோல் நிறத்தை காரணம் காட்டி உருவ கேலி செய்து மீம்ஸ் உருவாக்கி, வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் மீம்ஸ் பக்கங்களில் பரவலாக பகிரப்பட்டன.இந்த வைரல் தம்பதியருக்கு தெரியாமல் இருந்த நிலையில், பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் ரிஷப்பின் தாயிடம் சென்று மொபைலில் காட்டி விவரித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரிஷப், "முதலில் இது ஒரு ஜோக் என்று நினைத்தேன். ஆனால், மீம்ஸ்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இறுதியில், சமூக வலைதளங்களில் பல பக்கங்களில் எங்களின் புகைப்படங்களை பதிவிட்டு கேலி செய்திருப்பதை பார்த்தேன். எங்கள் நிறம் ஒரு பிரச்சினையாக எங்கள் உறவினர்கள் கூட இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால், சமூக ஊடகங்களின் சிந்தனைகள் இணைய உலகம் எவ்வளவு பொய்யானது என்பதை உணர்த்தியது. என்னை மட்டுமல்ல, என் அம்மா, சகோதரிகள், உறவினர்களும் ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாகினர்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், "இது வெறும் 30 வினாடி வீடியோ அல்ல. எங்கள் 11 ஆண்டு காதல் பயணத்தின் பலன். 2014-ல் கல்லூரியில் சந்தித்தோம், 2015-ல் காதலைச் சொன்னேன். 10 நாட்களுக்குப் பிறகு சோனாலி சம்மதித்தார். எதிர்காலத்தில் திருமணம் செய்வோம் என அன்றே தெரியும்" என்று உருக்கமாகக் கூறினார்.
சோனாலி இதுகுறித்து கூறுகையில், "ட்ரோல் செய்தவர்கள் லைக்ஸ், வியூஸ் பெறுவதற்காக செய்திருக்கலாம். ஆனால், அது சிலரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறோம்.

எங்கள் குடும்பங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் வற்புறுத்தியதும் அனைவரும் ஒப்புக்கொண்டனர். பணத்தை சேமித்து, மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் துணையாக இருந்தோம். திருமணம் என்பது வாழ்க்கைத் துணையை எவ்வளவு மரியாதையுடன் நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தது.

இது என் சொந்த முடிவு, இதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கிண்டலடித்தவர்களுக்கு நேரடியாக பதிலளித்தார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நெட்டிசன்கள் தம்பதியருக்கு ஆதரவாக பதிவிட்டு, "உண்மையான காதல் நிறம், உருவம், சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது.

கேலி என்கிற பெயரில் அடுத்தவர்களை காயப்படுத்தாதீர்கள்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ரிஷப் இறுதியாக, "உலகமே ட்ரோல் செய்தாலும், எனக்கு சோனாலி இருக்கிறார்; சோனாலிக்கு நான் இருக்கிறேன்" என்று புன்னகையுடன் தெரிவித்தார். இந்த நிகழ்வு, சமூக ஊடகங்களின் எதிர்மறை பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. தம்பதியரின் காதல் கதை, பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.
Summary in English : In Jabalpur, Madhya Pradesh, Rishabh Rajput and Sonali married on November 23 after an 11-year romance, with family approval. Their wedding photos went viral on social media, drawing praise but also harsh trolling and memes mocking Rishabh's skin color, affecting the family. The couple emphasized that true love transcends appearance, urging against hurtful comments.

