எட்டாம் வகுப்பு மாணவி கர்ப்பம்! கர்ப்பமாக்கியது யார் என தெரிந்து அதிர்ந்து போன நீதிமன்றம்..!

திருவண்ணாமலை, டிசம்பர் 20 : தனது சொந்த மகளை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 47). நாட்டு வைத்தியம் பார்த்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார். கன்னியப்பனின் மனைவி குழந்தை பிறந்த சில காலத்திலேயே கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளானார்.

இதனால், அவர்களது மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, பாட்டியின் பராமரிப்பில் அரசு பள்ளியில் படித்து வந்தார். 2021-ஆம் ஆண்டு, சிறுமி 8-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பள்ளிக்கு சென்றார். அப்போது சிறுமியின் வயிறு சற்று பெரிதாக தெரிந்ததை கண்ட ஆசிரியை, இது குறித்து விசாரித்தார்.

பாட்டியிடம் தகவல் தெரிவித்த ஆசிரியை, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக ஆரணி அனைத்து மகளிர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுமி மற்றும் பாட்டியிடம் நடத்திய விசாரணையில் கொடூர உண்மை வெளியானது. கொரோனா ஊரடங்கு காலத்தில், 2020 ஜூலை மாதம் ஒரு நாள் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, தந்தை கன்னியப்பன் மகள் என்றும் பாராமல் மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர், பல முறை இதேபோல் மிரட்டி வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில், 2021 பிப்ரவரி 25-ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆரணி அனைத்து மகளிர் போலீசார், கன்னியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமி சேலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். வழக்கு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கன்னியப்பன், சிறுமியின் கர்ப்பத்துக்கு தான் காரணம் இல்லை, தனக்கு ஆண்மை குறைபாடு உள்ளது எனக் கூறி மறுத்து வந்தார்.

இதனிடையே, சிறுமிக்கு 9-ஆவது மாதத்தில் குழந்தை பிறந்தது. குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை முடிவில், கன்னியப்பனே கர்ப்பத்துக்கு காரணம் என உறுதியானது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி பார்த்தசாரதி தலைமையிலான அமர்வு, கொடூர தந்தை கன்னியப்பனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார். தீர்ப்புக்குப் பின், கன்னியப்பனை போலீசார் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கொடூர சம்பவமும், நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பும் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்தவித சலுகையும் இல்லை என்பதை இத்தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Summary in English : A 47-year-old man from Arani near Tiruvannamalai repeatedly assaulted his minor, resulting in her pregnancy. The crime was uncovered in 2021 when teachers noticed her condition. DNA evidence confirmed his guilt, leading to a lifetime imprisonment sentence by the POCSO court, along with a ₹20,000 fine and ₹5 lakh compensation recommended for the victim.