இந்த கர்ப்பத்துக்கு காரணம் கணவர் தான்.. ஆனால், மனைவி கூறிய பகீர் தகவல்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்

டெல்லி: மத்திய டெல்லியின் ராம் நகர் பகுதியில் கள்ளக்காதல் தொடர்பான விவகாரம் கொடூர இரட்டைக் கொலையாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 வயது கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தனது காதலனால் பொதுவெளியில் கத்தியால் பலமுறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைத் தடுக்க முயன்ற அவரது கணவர், கத்தியைப் பறித்து காதலனை சரமாரியாக குத்தி கொன்றார்.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெயர் ஷாலினி (வயது 22).

இவர் இல்லத்தரசி மற்றும் இரு பெண் குழந்தைகளின் தாய். அவரது கணவர் ஆகாஷ் (வயது 23), இ-ரிக்ஷா ஓட்டுநர். கொல்லப்பட்ட காதலன் ஆசு எனப்படும் ஷைலேந்திரா (வயது 34), உள்ளூர் ரவுடி, பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஷாலினிக்கும் ஆசுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாலினி - ஆகாஷ் தம்பதியரின் உறவு சிக்கலான நிலைக்கு சென்றது. அப்போது ஷாலினி கணவர் ஆகாஷை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

அந்த நேரத்தில், ஆசுவுடன் தொடர்பு வைத்திருந்தார். இருவரும் ஒரு காலகட்டத்தில் கணவன்-மனைவியாக சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர், இரண்டு பெண் குழந்தைகளின் நியாபகத்தில் தவித்து வந்த ஷாலினி, மீண்டும் கணவர் ஆகாஷ் உடன் சேர்ந்து, தங்கள் இரு குழந்தைகளுடன் வாழத் தொடங்கினர். தன்னுடன் வாழ்ந்து வந்த ஷாலினி திடீரென கணவனுடன் சென்று விட்டது ஆசுவை கோபமடையச் செய்தது.

இந்நிலையில், ஷாலினி கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த கர்ப்பத்திற்கு காரணம் நான் தான், அது தனது குழந்தை என்றும் ஆசு கூறி வந்தார். ஆனால் ஷாலினி அதை மறுத்து, நான் உன்னுடன் ஒன்றாக இருந்தது உண்மை தான். ஆனால், இந்த குழந்தையின் தந்தை ஆகாஷ் தான் என்று கூறியதால் ஆசு ஆத்திரமடைந்தார். இதனாலேயே இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்தது கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி இரவு. ஆகாஷும் ஷாலினியும் ஷாலினியின் தாய் ஷீலாவை சந்திக்க குதுப் சாலை பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென ஆசு தோன்றி, கத்தியால் ஆகாஷை தாக்க முயன்றார். ஆகாஷ் அதை தவிர்த்தார்.

பின்னர் இ-ரிக்ஷாவில் அமர்ந்திருந்த கர்ப்பவதி ஷாலினியை பார்த்த ஆசு, அவரை பலமுறை குத்தினார். மனைவியை காப்பாற்ற முயன்ற ஆகாஷுக்கு கத்திக் காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், ஆசுவை மடக்கி கத்தியைப் பறித்து, அவரையே குத்தி கொன்றார்.

ஷாலினியின் சகோதரர் ரோஹித் உடனடியாக ஷாலினி மற்றும் ஆகாஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். போலீசார் ஆசுவை அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ஷாலினியும் ஆசுவும் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆகாஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய டெல்லி துணை போலீஸ் கமிஷனர் நிதின் வல்சன் வெளியிட்ட அறிக்கையில், "ஆகாஷ் மனைவியை காப்பாற்ற முயன்ற போது பல கத்திக் காயங்கள் ஏற்பட்டன. சம்பவம் பொதுவெளியில் நடந்ததால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஷாலினியின் தாய் ஷீலா அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary : In central Delhi's Ram Nagar, a 22-year-old pregnant woman, Shalini, was stabbed to death in public by her lover Aashu (34) over an extramarital affair dispute. Her husband Akash (23) overpowered Aashu, snatched the knife, and killed him while trying to save her. Akash is critically injured. Both Shalini and Aashu died in hospital.