மருமகனை தேடிச்சென்ற மாமியார்.. பின்னால் சென்ற மகள்.. காட்டில் நிர்வாணமாக தாயின் சடலம்.. சினிமாவை மிஞ்சும் மர்மம்..!

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதிக்குட்பட்ட புதூர் நாடு அருகே நடுக்குப்பம் கிராமத்தில் சொத்து பங்கீடு தொடர்பான பிரச்சினையால் மகளும் மருமகனும் சேர்ந்து பெற்ற தாயை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாம்பசிவம் - சின்னகாளி தம்பதிக்கு காளீஸ்வரி, கீதா என்ற இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் திருமணமாகி சென்ற நிலையில், சாம்பசிவம் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதையடுத்து சின்னகாளி தனியாக வசித்து வந்தார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இரவு, சின்னகாளியின் இரண்டாவது மகள் கீதா, தனது கணவர் சிதம்பரம் காணவில்லை எனக் கூறி தாயாரை அழைத்துக்கொண்டு வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மறைந்திருந்த சிதம்பரம், மாமியார் சின்னகாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் இறங்கியுள்ளார். இதில் கீதா தனது தாயாரை கணவருடன் சேர்ந்து தாக்கியதுடன், கையைப் பிடித்து மடக்கி வைத்துள்ளார். ஆத்திரமடைந்த சிதம்பரம் கல்லால் சின்னகாளியின் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலைக்குப் பின், சின்னகாளியின் ஆண் நண்பர் செய்தது போல தோற்றத்தை ஏற்படுத்த இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவரது உடையை கிழித்து அரை நிர்வாண நிலையில் விட்டு, மல்லிகை பூ மற்றும் கர்ச்சீப்பை போட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலையில் கீதா நாடகமாடி அழுது புலம்பியுள்ளார்.

டிசம்பர் 11ஆம் தேதி காலை சின்னகாளி அரை நிர்வாண நிலையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆரம்பத்தில் சின்னகாளியின் ஆண் நண்பர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால், கொலை நடந்த நாளில் அவர் ஆம்பூரில் இருந்தது உறுதியானது.

விசாரணையில் சிதம்பரத்தின் உடலில் ஏற்பட்ட காயங்கள் போலீசாரின் கவனத்தை ஈர்த்தன. கீதாவையும் சிதம்பரத்தையும் தனித்தனியே விசாரித்ததில் இருவரும் வாக்குமூலம் அளித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னணி: ஜவ்வாது மலைப் பகுதியில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. இதனால் சின்னகாளிக்கு சுமார் 6 ஏக்கர் நிலம் கிடைக்கவிருந்தது.

இதை தனது பெயரில் எழுதி வைக்குமாறு கீதா கேட்டுள்ளார். ஏற்கெனவே கீதாவுக்கு 1.5 ஏக்கர் நிலம் எழுதி வைத்திருந்த சின்னகாளி மறுத்துவிட்டார். "நான் செத்தால்தான் உனக்கு சொத்து" என சின்னகாளி கூறியதால் ஆத்திரமடைந்த கீதா, கணவருடன் சேர்ந்து இக்கொலையை திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளார்.

கீதா - சிதம்பரம் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொலை செய்து சொத்தை அபகரிக்க நினைத்த இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கீதா வேலூர் பெண்கள் சிறையிலும், சிதம்பரம் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Tirupathur district's Javvadu Hills, widow Chinnakali was murdered by her daughter Geetha and son-in-law Chidambaram over a property dispute. She refused to transfer additional land, leading to the planned attack with a stone. They staged the scene to implicate her friend, but police uncovered the truth and arrested them.