லக்ஷ்மன்கேடா கிராமம், சாத் போலீஸ் ஸ்டேஷன் எல்லை, கான்பூர், உத்தரப் பிரதேசம்.
இரவு மணி பத்தரை ஆகியிருக்கும். வீட்டுக்குள் அமைதி. டிராக்டர் ஓட்டுநர் திரேந்திரா சாப்பிட்டு முடித்து, சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். அவன் மனைவி ரீனா அவனுக்கு முன்பாக உட்கார்ந்து, புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அந்தப் புன்னகையில் ஒரு மறைவான நடுக்கம் இருந்தது.

"இனிமே இந்த வீட்டுல எல்லாத்தையும் கண்காணிக்கப் போறேன்" என்று திரேந்திரா சில நாட்களுக்கு முன்பு சொல்லியிருந்தான். "சில சந்தேகங்கள் இருக்கு... CCTV போடலாம்னு யோசிச்சுட்டிருக்கேன்."
அந்த வார்த்தைகள் ரீனாவின் இதயத்தில் ஊசியாய் தைத்தன. அவளுக்குத் தெரியும்... அந்த கேமராக்கள் எதையெல்லாம் பதிவு செய்யும் என்பது.
அன்றைய இரவு உணவில் ரீனா ஒரு சிறப்பு 'மசாலா' சேர்த்திருந்தாள். தூக்க மாத்திரைகள்... அதுவும் அதிக அளவில். திரேந்திரா சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே அவன் கண்கள் மங்கத் தொடங்கின. தலை சுற்றியது. உடல் தளர்ந்தது. அவன் தூக்கத்தில் மயங்கிக் கிடந்தான்.
அப்போதுதான் வீட்டின் பின்புறக் கதவு திறந்தது. உள்ளே வந்தான் சதீஷ் – ரீனாவின் சகோதரன் மகன்... அதாவது அவளுடைய மருமகன் முறை. இரண்டு வருடங்களாக இருவருக்கும் இடையே ரகசியமாக நடந்துவந்த காதல், அன்று கொலையாக மாறியது.
இருவரும் ஒரு பெரிய மரப்பலகையை எடுத்தனர். மயங்கிக் கிடந்த திரேந்திராவின் தலையிலும், மார்பிலும், மீண்டும் மீண்டும் அடித்தனர். ரத்தம் தரையெங்கும் பரவியது. கணவனின் உடலில் இருந்து ரத்தம் வந்தும் கூட, உயிர் பிரியும் வரை அவர்கள் நிற்கவில்லை.

கொலை முடிந்ததும் திட்டம் முடியவில்லை. ரீனா அழுது புலம்பத் தொடங்கினாள். "என் புருஷனை யாரோ கொன்னுட்டாங்க... ஐயோ!" என்று கத்தினாள். அக்கம் பக்கத்தினரை வரவழைத்து, நாடகம் ஆடினாள். திட்டம் வேலை செய்யும் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது.
முதலில் போலீஸ் மூன்று அப்பாவிகளைப் பிடித்து ஜெயிலில் அடைத்தது. அந்த மூன்று பேரும், சம்பவம் நடந்த போது அந்த கிராமத்திலேயே இல்லை என்பது ஐயமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால், கிராமத்தில் பரபரப்பு அதிகமானது.

ஆனால், உண்மை ஒளிந்து கொண்டிருக்க முடியவில்லை.
விசாரணை தீவிரமடைந்தது. சந்தேகத்தின் வலை சுருங்கியது. இறுதியில் மே 18 ஞாயிற்றுக்கிழமை – ரீனாவும், சதீஷும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின்போது சதீஷ் கண்ணீரோடு சொன்னான்...
"என் அத்தை ரீனாவோடு எனக்கு ரெண்டு வருஷமா கள்ள உறவு இருந்துச்சு. மாமா திரேந்திராவுக்கு தெரிஞ்சுடுச்சு. அவர் எதிர்த்தார். அதனாலதான்... கொன்னுட்டோம்."

கான்பூரின் இந்தக் கொலை, வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீரட்டில் நடந்த முஸ்கான் – சாகில் கொலைக்கு மீண்டும் ஊரெல்லாம் நடுங்க வைத்தது.
மீரட்டில் முன்னாள் மெர்ச்சண்ட் நேவி அதிகாரி சௌரப் ராஜ்புத்தை அவரது மனைவி முஸ்கானும், அவளது காதலன் சாகிலும் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து, குத்திக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, சிமெண்ட் நிரப்பிய ப்ளூ டிரம்மில் மறைத்து, பிறகு ஷிம்லா சுற்றுலா போய் வந்த கதை... இன்னும் மக்களின் மனதில் பசுமையாக இருக்கிறது.

இப்போது கான்பூரிலும் அதே கதை... அதே காதல்... அதே துரோகம்... அதே ரத்தம்.
இந்தக் கிராமங்களில் காதல் எப்போதும் அமைதியாக இருப்பதில்லை. சில சமயங்களில் அது கொலையின் வடிவம் எடுத்துவிடுகிறது.
மீண்டும் ஒரு குடும்பம் சிதைந்தது.மீண்டும் ஒரு உயிர் பறிக்கப்பட்டது.மீண்டும்... காதலின் பெயரால் ரத்தம் சிந்தப்பட்டது.
Summary : In Kanpur, a woman and her nephew ended the life of her husband after he suspected their relationship and planned to install CCTV. They used sedatives in food followed by physical assault. Initially, innocent people were detained, but investigation led to the arrest of the real accused.

