நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் ஜனநாயகன் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டதால், படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கும் என அறிவித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தை டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கைக்கு சமர்ப்பித்த படக்குழு, சிறிய மாற்றங்களை செய்து டிசம்பர் 24இல் மீண்டும் அனுப்பியது. டிசம்பர் 29இல் U/A சான்றிதழ் வழங்கப்படும் என தகவல் வந்த நிலையில், ஜனவரி 5இல் திடீரென ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத சம்பந்தமான புகாரும், ராணுவ சின்னங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டது என்பதும் காரணமாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், CBFC தரப்பில் வெளியீட்டு தேதியை வைத்து அவசரப்படுத்த முடியாது என வாதிடப்பட்டது. தீர்ப்பு ஜனவரி 9இல் வருவதால், உடனடியாக சான்றிதழ் கிடைத்தாலும் படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு செல்ல குறைந்தது 3 நாட்கள் தேவைப்படும். எனவே, ஜனவரி 12ஆம் தேதி வரை ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
ஒருவேளை CBFC நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், சனி, ஞாயிறு மற்றும் சங்கராந்தி விடுமுறைகள் காரணமாக விசாரணை தாமதமாகி, ரிலீஸ் இரண்டு வாரங்கள் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இது படத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
பட வெளியீடு தாமதமாகும் சூழலில், முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது:
ஆன்லைனில் புக் செய்தவர்கள்: பணம் செலுத்திய அதே அக்கவுண்டுக்கு தானாக திரும்ப வரும்.
திரையரங்கில் நேரில் புக் செய்தவர்கள்: அந்த திரையரங்குக்கு சென்று பணத்தை திரும்பப் பெறலாம்.
ரசிகர் மன்றம் மூலம் புக் செய்தவர்கள்: சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றத்தை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இப்படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே இறுதி முடிவு தெரியவரும்.
Summary : The release of Vijay's Jananayakan, scheduled for January 9, 2026, faces delay due to pending CBFC certification. The production approached the High Court, which will deliver its verdict on January 9. Depending on the outcome, the film may release on January 12 or face further postponement.

