புதுக்கோட்டை : எம்.எஸ்.சி. பட்டதாரியான மனைவி மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்பதால் சந்தேகம் ஏற்பட்டு, அவரைத் தாக்கிக் கொலை செய்து, உடலைத் தீவைத்து எரித்து, தற்கொலை நாடகம் ஆடிய கணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே உள்ள புது விடுதி பகுதியில் நடந்துள்ளது. முருகேசன் (33) என்பவர் அங்கு விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரியான ஆஷா (வயது 28) என்பவரை இரு தரப்பு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த நவம்பர் 10-ம் தேதி ஆஷா வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். வேலையிலிருந்து வீடு திரும்பிய முருகேசன், மனைவியின் உடலைப் பார்த்து கதறியதாக முதலில் கூறப்பட்டது.
ரெகுநாதபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்தனர். ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் கோபால் விசாரணை நடத்தினார்.
ஆஷாவின் தாயார் (முருகேசனின் மாமியார்), மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து முருகேசனை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
மொபைல் சந்தேகமே கொலைக்குக் காரணம்
ஆஷா வீட்டிலேயே இருந்ததால், போலீஸ் பணியில் சேர வேண்டும் என இணையத்தில் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. முருகேசன் வீடு திரும்பும் போதெல்லாம் ஆஷா மொபைலில் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.
இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு முறை ஆத்திரத்தில் ஆஷாவின் மொபைலை உடைத்த முருகேசன், அதன் பிறகு ஆஷா தனது கணவரின் மொபைலைப் பயன்படுத்தி வந்தார்.
சம்பவ நாளன்று வீட்டுக்கு வந்த முருகேசன், மனைவி போனில் மூழ்கியிருந்ததால் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றியதில் ஆஷாவைத் தாக்கினார்.
அப்போது அருகில் இருந்த சுவற்றில் ஆஷாவின் தலை இடித்து மயங்கினார். ஆத்திரம் தணியாத முருகேசன், “நடிக்கிறியா?” எனக் கேட்டு ஆஷாவைத் தூக்கிச் சுவற்றோரம் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த முருகேசன், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றித் தீவைத்து எரித்தார். வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். மாலையில் திரும்பி வந்து, “மனைவி தற்கொலை செய்துகொண்டாள்” எனக் கதறி அழுது உறவினர்களை நம்ப வைத்தார்.
இந்த வழக்கில் ரெகுநாதபுரம் போலீசார் முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : In Pudukkottai district near Regunathapuram, 33-year-old agricultural worker Murugeshan lived with his wife Asha, an MSc graduate, and their young daughter in Puduviduthi. On November 10, Asha was found with burn injuries at home. Following her mother's concern, police examined the case and took Murugeshan into custody after questioning.