சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொளத்தூர் தொகுதி முடிவு. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் வி.எஸ்.பாபு, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஒரு முதல்வர் வேட்பாளராக இருந்து அடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்த இரண்டாவது முதல்வர் என்ற வரலாற்றுப் பெயரை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.தவெக போன்ற புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் எப்படி ஒரு அனுபவமிக்க முதல்வர் வேட்பாளரை தோற்கடிக்க முடிந்தது என்ற விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் நடந்தது கிட்டத்தட்ட அதிமுக-தவெக கூட்டணி போன்ற வாக்கு பரிமாற்றமே என்பது தெரியவந்துள்ளது.
வி.எஸ்.பாபு யார்? கொளத்தூர் மக்களுக்கு பரிச்சயமான 'அதிமுக முகம்'
கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு (75), கொளத்தூர் பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான அரசியல் தலைவர்.
ஒரு காலத்தில் திமுகவில் வட சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். 2006-ல் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். பின்னர் அதிமுகவில் இணைந்து, கொளத்தூர் தொகுதியில் அதிமுகவின் முகமாகவே செயல்பட்டு வந்தார்.
அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், சீட் கிடைக்காத காரணத்தால் கடைசி கட்டத்தில் தவெகவில் இணைந்தார். இந்த இணைப்பு கொளத்தூர் தொகுதியில் அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகளை பெருமளவு தவெக வேட்பாளருக்கு திருப்பியது என்பது தெரியவந்துள்ளது.
அதிமுக சார்பில் தனி வேட்பாளர் (பி.சந்தானகிருஷ்ணன்) போட்டியிட்ட போதிலும், பாபுவின் உள்ளூர் செல்வாக்கு மற்றும் பரிச்சயம் காரணமாக அதிமுக வாக்குகளில் பெரும் பகுதி அவருக்கு சாதகமாக அமைந்தது.
இதன் விளைவாக, தவெகவின் 82,997 வாக்குகளுக்கு எதிராக ஸ்டாலின் 74,202 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். இது ஒரு புதிய கட்சியின் வெற்றி மட்டுமல்ல; உள்ளூர் செல்வாக்கு மிக்க தலைவரின் மூலம் அதிமுக-தவெக வாக்கு ஒருங்கிணைப்பு என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
'ஒரு புதிய கட்சி எப்படி?' – விமர்சனத்துக்கு பதில்
தேர்தல் முடிவுகள் வெளியானதும், "ஒரு புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் எப்படி முதல்வர் வேட்பாளரை தோற்கடிக்க முடியும்?" என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கொளத்தூர் மக்களின் வாக்கு முறைமை இந்த விமர்சனத்தை மறுத்துள்ளது.
ி.எஸ்.பாபு கொளத்தூர் பகுதியில் அதிமுகவின் முகமாக நீண்ட காலமாக செயல்பட்டவர். அவரது உள்ளூர் பரிச்சயம், மக்கள் தொடர்பு மற்றும் அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகளை தனக்கு சாதகமாக்கியது – இதுவே ஸ்டாலினுக்கு 'குஜிலிமஸ்து' ஆனது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய்யின் புதிய அரசியல் அலைக்கு இணையாக, பாபுவின் அனுபவமும் உள்ளூர் செல்வாக்கும் இணைந்து இந்த அதிர்ச்சி வெற்றியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினுக்கு வரலாற்று தோல்வி
மு.க.ஸ்டாலின் 2011 முதல் கொளத்தூர் தொகுதியை தனது கோட்டையாக வைத்திருந்தவர். இந்த முறை அவர் தோல்வியடைந்தது, தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு முதல்வர் வேட்பாளராக இருந்து அடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்த இரண்டாவது முதல்வர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
தவெகவின் முதல் தேர்தல் பங்கேற்பிலேயே இத்தகைய பெரிய உச்சத்தை எட்டியது, விஜய்யின் கட்சியின் வலிமையை வெளிப்படுத்துகிறது. கொளத்தூர் போன்ற 'ஸ்டார்' தொகுதியில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சி, தமிழக அரசியல் சமன்பாட்டை மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.
இந்த முடிவு தொடர்பாக அரசியல் வட்டாரங்கள், "உள்ளூர் செல்வாக்கு மற்றும் வாக்கு ஒருங்கிணைப்பு இல்லாமல் புதிய கட்சியால் இது சாத்தியமில்லை" என்கின்றன. கொளத்தூர் மக்களின் வாக்கு, அரசியலில் 'பரிச்சயம்' மற்றும் 'உள்ளூர் தொடர்பு' எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.இந்த அதிர்ச்சி முடிவு தமிழக அரசியலை எங்கு கொண்டு செல்லும் என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும்.
Summary in English : In the 2026 Tamil Nadu Assembly elections, VS Babu of Tamizhaga Vetri Kazhagam defeated Chief Minister MK Stalin in Kolathur constituency by a margin of 8,795 votes. Babu, a former AIADMK functionary with strong local support, secured victory through consolidation of AIADMK and party votes in his familiar area.
