“ஒரே நேரத்தில் 4 பேர்.. வலியில் துடித்த இளம்பெண்” 5 ஆண்டுகள் கழித்து தட்டி தூக்கிய சேலம் போலீஸ்!

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி குமாரசாமிப்பட்டி பகுதியில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேஜ்மண்டல் உயிரிழப்பு சம்பவத்தில் சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிஷி என்ற பெண் புனேவில் தலைமறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த தேஜ்மண்டல் என்ற பெண் முன்பு பெங்களூருவில் அழகு நிலையம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் 2021-ஆம் ஆண்டு சேலம் வந்த அவர், பள்ளப்பட்டி மற்றும் சங்கர் நகர் பகுதிகளில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் மையம் நடத்தி வந்துள்ளார்.

இதற்காக குமாரசாமிப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும், லப்லு, நிஷி, ஷீலா, ஓஷி உள்ளிட்டோர் அவரிடம் பணியாற்றி வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.2021 அக்டோபர் 15-ஆம் தேதி தேஜ்மண்டல் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததுடன், உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், இந்த சம்பவம் அப்போது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

போலீஸ் விசாரணையில், தேஜ்மண்டலிடம் பணியாற்றி வந்த நிஷிக்கும் லப்லுவுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே லப்லுவுக்கும் தேஜ்மண்டலுக்கும் இடையே தவறான உறவு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

பெங்களூருவில் ஒரு வழக்கில் லப்லுவும் நிஷியும் சிக்கியபோது தேஜ்மண்டல் அவர்களுக்கு உதவ மறுத்துள்ளார். மேலும், மசாஜ் மையத்தில் பணியாற்றியதற்கான ஊதியம் தொடர்பாகவும் தேஜ்மண்டலுக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தேஜ்மண்டலின் உயிரைப் பறித்து அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் செல்ல நிஷியும் லப்லுவும் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி 2021 அக்டோபர் 15-ஆம் தேதி லப்லு, நிஷி, ஷீலா, ஓஷி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து தேஜ்மண்டலைத் தாக்கி அவரது கை, கால்களைத் துணியால் கட்டி, வாயில் துணியை வைத்து மூச்சுத்திணறச் செய்து உயிரைப் பறித்ததாகவும், பின்னர் உடலை சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு நகை மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு அந்தக் குழு பெங்களூரு வழியாகத் தப்பி வங்கதேசத்திற்குச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் ஐந்தாண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நிஷி, மீண்டும் இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் புனேவில் தங்கியிருந்த அவர், கர்நாடகாவைச் சேர்ந்த பரசுராம் நாடார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு பெண் குழந்தையுடன் வசித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு நிஷி புனேவில் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து புனே சென்ற சேலம் தனிப்படை போலீசார், அங்குள்ள போலீசாரின் உதவியுடன் நிஷியைக் கைது செய்தனர். பின்னர் அவரை சேலத்திற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட நிஷியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் லப்லு, ஷீலா மற்றும் ஓஷி ஆகிய மூவரையும் கைது செய்ய சேலம் தனிப்படை போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சுமார் ஐந்தாண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக நிஷி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், சேலம் மக்களுக்கு போலீசார் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை தொடர்கிறது.'

Summary in English : Salem police arrested Nishi in Pune after five years in the 2021 Tejmandal death case from Kumarasamyapatti. The Bangladeshi woman who ran a beauty parlor was found deceased in a suitcase. Co-workers fled after wage and personal disputes. Police now search for the remaining three suspects.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.