கடந்த 2004-ம் ஆண்டு தமிழில் வெளியான காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. அந்த படத்திலிருந்து இவரை அனைவரும் காதல் சந்தியா என அழைக்க தொடங்கினர்.
வெறும் 1.25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 10 கோடி ரூபாயை வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சந்தியாவின் கதாபாத்திரம் பேசப்பட்டது.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கபட்ட இளம் நடிகைகளில் இவரும் ஒருவர். அதே போல, காதல் திரைப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்தார் காதல் சந்தியா.
ஆனால், படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2015-ம் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமானார் சந்தியா.
இவரது திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருந்தது. ஆனால், அந்தசமயத்தில் சென்னையில் வெள்ளம் வந்ததால் தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை மட்டும் வைத்து கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.
மேலும், தன்னுடைய திருமணத்திற்கு செலவு செய்ய வைத்திருந்த பணத்தை சென்னை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்து மக்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமான இவர் பிரசவத்துக்குப் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும் மன அழுத்த நோயால்பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரசவம் முடிந்து இரண்டரை ஆண்டுகளாக இந்த பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படவர்களுக்கு காரணமே இல்லாமல் அழுகை வருமாம்.
தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை அவரை அறியாமலேயே அழுது கொண்டிருப்பாராம் சந்தியா. இது இயல்பான பிரச்னைதான் என்றாலும், ரொம்ப கவலையும் வலியும் இருக்குமாம்.
இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சந்தியாவிற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்கள். ஒரு வழியாக அந்த பிரச்னையில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு மீண்டு வந்திருக்கிறார் சந்தியா.
இந்நிலையில், இது குறித்த விழிப்புணர்வை பிரசவம் ஆன தாய்மார்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், இது போன்ற பிரச்னைகளுக்கு ஆளான பெண்களுக்கு அவரது குடும்பத்தினர் ஆதரவு தான் மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறுகிறார் சந்தியா.