வணக்கம் நண்பர்களே, ஜோதிடர் முத்துகுமார் உங்களுக்காக எழுதுகிறேன். இன்று நாம் முக்கியமான ஒரு தலைப்பைப் பற்றி பார்க்க இருக்கிறோம். அது என்னவென்றால், ஒரே ராசியில் திருமணம் செய்யலாமா? என்பது தான்.
திருமணம் என்றால் புத்தாடைகள், கொண்டாட்டம், உறவினர் வருகை, மண்டபம், கூத்து, கும்மாளம், விருந்து இது எல்லாம் தான் முதலில் நினைவுக்கு வரும்.
ஆனால், மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரும் முதலில் பார்க்க வேண்டியது இந்த கொண்டாட்டங்களை அல்ல. இரண்டு பேருடைய பிறப்பு ஜாதகத்தையும் ஒப்பிட்டு இருவரும் சேர்ந்து வாழும் போது சரியாக இருக்குமா அல்லது சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை முறையான ஜோதிடரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். ஒரே ராசியாக இருந்தாலும், ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாமா, கூடாதா? பலர் கூடாது என்று சொல்கிறார்களே, அது உண்மையா? இந்த கேள்விக்கான நேரடியான பதிலை இப்போது பார்ப்போம்.
உண்மைதான்! ஒரே ராசியிலோ அல்லது ஒரே நட்சத்திரத்திலோ பிறந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது என்று ஜோதிடம் கூறுகிறது. ஏன் அப்படி சொல்கிறார்கள்? அதற்கு என்ன காரணம் என்று இப்போது பார்க்கலாம்.
காரணம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் ஜோதிடம் கூறாது. ஒரே ராசியில் திருமணம் செய்யக்கூடாது என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கணவன் மனைவி உறவு என்பது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பது. ஒருவருக்கு கஷ்டம் வரும்போது, மற்றொருவர் ஆதரவாகவும், பலமாகவும் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மனைவி அவரை கவனித்துக்கொள்ள வேண்டும். அதேபோல மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால், கணவர் அவருக்கு உதவ வேண்டும்.
ஆனால், ஒரே ராசியில் இருக்கும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும்போது, சந்தோஷம், மகிழ்ச்சி, கஷ்டம், தொந்தரவு என எது வந்தாலும் இருவருக்கும் ஒரே நேரத்தில் வர வாய்ப்புள்ளது.
இதுதான் அடிப்படை சிக்கல். இருவருமே ஒரே நேரத்தில் நோய்வாய்ப்பட்டால் அல்லது கடன் பிரச்சினையில் சிக்கிக்கொண்டால், அந்த குடும்பத்தை எப்படி நகர்த்துவது? ஒருவருக்கு பிரச்சனை என்றால், இன்னொருவர் தாங்கிப் பிடிப்பதுதான் குடும்ப வாழ்க்கையின் அடிப்படை. அதுவே இல்லாமல் போனால், மகிழ்ச்சி எப்படி இருக்கும்?
இதற்கு பின்னால் இருக்கும் காரணம் கோச்சாரம்!
சரி, ஒரே ராசியில் திருமணம் செய்தால் பிரச்சனை வரும் என்று கூறுகிறீர்கள், ஆனால் அதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம்? அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டுமென்றால், அது கோச்சாரம்.
ஒருவருடைய ஜாதகம் எப்படி இருந்தாலும், என்ன தசா புத்தி நடந்தாலும், கோச்சாரம் எனப்படும் நிகழ்கால கிரக பெயர்ச்சி, வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது மறுக்க முடியாத உண்மை.
உதாரணத்திற்கு, கணவன் மிதுன ராசி, மனைவியும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். மிதுன ராசிக்கு இரண்டாம் அதிபதியான சந்திரன், கோச்சாரத்தில் எட்டாம் வீடான மகர ராசிக்குள் நுழையும்போது, இருவருக்குமே சந்திராஷ்டமம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன? மன சஞ்சலம், குழப்பம், சண்டை சச்சரவுகள் போன்றவை ஏற்படக்கூடிய நாள். அப்படிப்பட்ட நாளில், கணவன் மனைவி இருவருக்குமே சந்திராஷ்டமம் என்றால், அவர்கள் கீரியும் பாம்புமாக சண்டை போட்டுக் கொள்வார்கள்.
ஒருவேளை வெவ்வேறு ராசியாக இருந்தால், ஒருவருக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருக்கும். அப்போது ஒருவர் சண்டை போட்டாலும், இன்னொருவர் விட்டுக்கொடுத்து போகவோ அல்லது பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவோ வாய்ப்பு இருக்கும். ஆனால் இருவருக்குமே ஒரே நேரத்தில் சந்திராஷ்டமம் வந்தால் சிக்கல்தான்.
வருட கிரகங்களான ராகு, கேது, குரு, சனி போன்ற கிரகங்கள் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பார்கள். உதாரணமாக, கணவன் மனைவி இருவரும் மிதுன ராசியாக இருந்து, சனி பகவான் கோச்சாரத்தில் தனுசு ராசிக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். தனுசு ராசி மிதுன ராசிக்கு ஏழாம் இடம். சனிபகவான் எட்டாம் மற்றும் ஒன்பதாம் அதிபதி. இப்போது, சனி பகவான் ஏழாம் இடத்திற்கு வந்தார் என்றால் இருவரது மனநிலையையும் திருமண வாழ்க்கை துணைக்கு எதிராக திருப்புவார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இருவருடைய திருமண வாழ்க்கையிலும் விரும்பத்தகாத நிகழ்வுகள் வரலாம். இருவருமே தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்து, விட்டுக் கொடுக்காமல் பேசக்கூடிய மனநிலை வரலாம். இதனால் குடும்பம் பிரியக்கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம்.
நல்ல பலனாக இருந்தாலும், தீய பலனாக இருந்தாலும், இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் நடந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி கேள்விக்குறியாகும். கணவன் மனைவி உறவு என்பது விட்டுக் கொடுத்து செல்வது தான் நியதி.
தீர்வு என்ன?
எனவே நண்பர்களே, ஒரே ராசியில் பிறந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை தவிர்த்து விடுவது பல நன்மைகளை தரும். திருமண விஷயத்தில் ஒரு முடிவு எடுக்கும் முன்பு, தகுந்த ஜோதிடரை அணுகி, அவருடைய ஆலோசனையை பெற்று வாழ்க்கையில் மேன்மை அடையுங்கள்.
திருமணம் செய்துவிட்டு, பிறகு ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு சென்றால், அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக ஏதாவது பரிகாரம் சொல்லுவார்களே தவிர, சரியான வழிகாட்டலை தரமுடியாது.
ஏக நட்சத்திரம் திருமணம் செய்யலாமா...?
தவிர்த்து விடவும்
ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா..?
செய்யக்கூடாது
ஒரே ராசி திருமணம் செய்யலாமா.?
கூடாது
ஏக ராசி ஏக நட்சத்திரம் பொருத்தம்..?
தவிர்ப்பது சிறந்தது
ஒரே ராசி ஒரே லக்னம்..?
கூடாது. திருமணத்தின் போது லக்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. ஒரே லக்னமாக இருந்து வெவ்வேறு ராசி என்றால் திருமண பொருத்தம் வருகிறது என்றால் திருமணம் செய்யலாம்.
ஒரே ராசி ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா..?
செய்யவே கூடாது.
ஒரே திசை நடந்தால் திருமணம் செய்யலாமா..?
தவிர்த்து விடுங்கள்.
திருமண பொருத்தம் பார்க்கும்போது, ஜாதக பொருத்தம் சிறப்பாக இருக்கிறதா என்பதை தெளிவாக பார்க்க வேண்டியது அவசியம். இது போன்ற ஜோதிட தகவல்களை தொடர்ந்து நம்முடைய தளத்தில் எழுத போகிறேன்.
தொடர்ந்து ஜோதிடம் மற்றும் வாழ்க்கை வெற்றிக்காண ஆன்மீக வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொள்ள என்னுடன் இணைந்திருக்க வேண்டும் என்றால் என்னுடைய டெலிகிராம் அல்லது வாட்ஸ்அப் குழுவில் என்னுடைய நண்பராக இணைந்து கொள்ளுங்கள். லிங்க் கீழே கொடுத்துள்ளேன். பல முன்னேற்றங்களை பெறலாம்.
நன்றி..!
0 கருத்துகள்