இது தான் நடந்தது.. பாடகி கல்பனா பரபரப்பு பேச்சு..

பிரபல பின்னணி பாடகி கல்பனா, அண்மையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து கண்ணீர் மல்க செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் கல்பனா. 

சினிமாக்காரர்கள் என்றால் தங்கள் மீது சேற்றை வாரி இறைக்கலாமா என்றும், தான் மயங்கி விழுந்த நிலையில் போர்வை விலக்கி அநாகரீகமாக புகைப்படம் எடுத்ததாகவும் வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் தனது இனிய குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகி கல்பனா. பின்னணி பாடகியாக மட்டுமின்றி, பல தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். 

ஹைதராபாத்தில் தனது கணவருடன் வசித்து வரும் கல்பனா, சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவியது. வீட்டில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி என செய்திகள் வெளியான நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கல்பனா, தூக்கமின்மை காரணமாக மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொண்டதால் மயக்கம் ஏற்பட்டதாக வீடியோ மூலம் விளக்கம் அளித்தார். 

மேலும், தன்னைப்பற்றியும், தன் கணவர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவுவதாகவும், தனது கணவர் தான் தன்னை உயிரோடு காப்பாற்றியதாகவும் உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கல்பனா, தான் தற்கொலைக்கு முயலவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

கண்ணீர் மல்க பேசிய கல்பனா, "சமீபத்தில் நடந்த சம்பவங்களால் எனக்கு கிடைத்தது நெகட்டிவ் பப்ளிசிட்டி தான். நான் தற்கொலைக்கு முயற்சிக்கவே இல்லை. எனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில பிரச்சனைகள் உள்ளன. 45 வயதில் மெனோபாஸ் கட்டத்தை நெருங்கி வருகிறேன். 

ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எவ்வளவு பிரச்சனைகளை சுமக்கிறாள் என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை. ஒரு நல்ல செய்தி 100 பேரை சென்றடைகிறது என்றால், கெட்ட செய்தி ஆயிரம் பேரை சென்றடைகிறது" என்று வேதனையுடன் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய கல்பனா, "நான் தற்போது சட்டப்படிப்பு படித்து வருகிறேன். நுரையீரல் பிரச்சனையும் உள்ளது. இதற்கிடையே எனது சினிமா கேரியரையும் கவனித்து வருகிறேன். எனது கணவர் தான் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். பல வருடங்களாக உடல் ரீதியான பிரச்சனை இருப்பதால் தூக்கமின்மை உள்ளது. 

அதற்காக வழக்கத்திற்கு மாறாக அதிக டோஸ் மாத்திரை எடுத்துக் கொண்டதால் மயக்கம் வந்துவிட்டது. கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே நான் மயங்கி விழுந்துவிட்டேன். உடனே அவர்தான் போலீசுக்கும், ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்து என்னை காப்பாற்றினார். 

ஆனால், அதற்குள் எங்களைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டது. மீடியாக்கள் கூட என்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பினார்கள். மயங்கி கிடந்த என் முகத்தில் இருந்த போர்வையை விலக்கி போட்டோ, வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சினிமாக்காரர்கள் என்பதால் எங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். 

காதில் கேட்க முடியாத விஷயங்கள் நடக்கின்றன. நாட்டில் நடக்கும் தவறுகளை பற்றி செய்தி போடாமல் தனிப்பட்ட சிலரின் செய்திகளை போடுகிறார்கள். தவறான செய்திகளை யூடியூப் சேனல்கள் பதிவிட்டார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. 

ஏன் சினிமா துறையை சேர்ந்தவர்களை மட்டும் மட்டமாக பார்க்கிறீர்கள்?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த கல்பனா, "முதலமைச்சர் ஸ்டாலினிடம் நான் ஒன்றே ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். 


ஊடகங்கள் மற்றும் யூடியூபில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். கல்பனாவின் இந்த பேட்டி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரப்புவது குறித்தும், சினிமா பிரபலங்களை மட்டமாக சித்தரிப்பது குறித்தும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது. 

சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலே அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் சமூகத்தில் நிலவுவது வருந்தத்தக்கது. கல்பனாவின் கோரிக்கையை அரசு செவிசாய்க்கு மா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.