தமிழ் சினிமாவில் தேடல் கதையம்சம் கொண்ட பல பேண்டஸி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில், இந்த வாரம் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில், பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள "அகத்தியா" திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
திரைக்கதை சுருக்கம்:
ஜீவா சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கிறார். அவரது முதல் படமான செட் வீணாகிறது. ராஷி கண்ணா, ஜீவாவிடம் அந்த செட்டை ஸ்கேரி ஹவுஸாக மாற்றலாம் என யோசனை கூறுகிறார்.
ஸ்கேரி ஹவுஸாக மாற்றிய பின், அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. ஜீவாவிற்கு ஒரு பழைய ரீல் கிடைக்க, அதில் அர்ஜுன் 1940-ல் சித்த மருத்துவராக வருகிறார். 1940-ல் அர்ஜுன், கொடூர ப்ரன்ச் ராஜாவின் தங்கையை குணப்படுத்துகிறார்.
மேலும் எலும்பு புற்றுநோய்க்கான மருந்தையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அந்த கதை முடிவடைகிறது. ஜீவாவின் அம்மாவுக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது.
1940-ல் என்ன நடந்தது என்பதை ஜீவா அறிய நினைக்கிறார். கேன்சர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?, அப்படி இருந்தால் அதை எடுத்து அம்மாவை குணப்படுத்த வேண்டும் என நினைக்கிறார். இதற்கு ஒரு பேய் தடையாக வருகிறது. இறுதியில் ஜீவா என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.
படத்தின் அலசல்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவா இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க முயற்சித்துள்ளார். பேண்டஸி கதையை தேர்ந்தெடுத்து புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஜீவா தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். சித்த மருத்துவராக வரும் அர்ஜுன், தனது இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக வரும் எட்வர்ட் கவனம் ஈர்க்கிறார்.
ராதாரவி வெள்ளைக்காரர்கள் கைக்கூலியாக நக்கல் கலந்த பேச்சால் வெறுப்பேற்றுவதுடன் ரசிக்கவும் வைக்கிறார். 1940 மற்றும் நிகழ்காலம் என கதை மாறி மாறி பயணிக்கிறது.
பேய் பங்களா வழக்கம்போல் கதையில் வருகிறது. அர்ஜுன் எடுத்த வீடியோ நேரில் பார்த்தது போல் ஜீவாவிற்கு தெரிவது லாஜிக் மீறல் என்றாலும், ரசிகர்களுக்கு கதை புரிய வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
1940 காட்சிகளில் பாரதிதாசன், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், முரசொலி போன்ற வசனங்கள் இடம்பெற்றிருப்பது ரசிக்கும்படி உள்ளது. மகதீரா பாணியில் அந்தக் காலம், இந்தக் காலம் என கதை நகர்ந்தாலும், ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவிற்கு சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை.
பொதுவாக பேய் படங்கள் என்றால் காமெடி காட்சிகள் நன்றாக இருக்க வேண்டும். ஆனால், படத்தில் காமெடி காட்சிகள் இருப்பதாக படக்குழு நினைத்தாலும், ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லை.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. குறிப்பாக 1940-கால காட்சிகள் மிக சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிதாக கவரவில்லை.
கிளைமாக்ஸ் காட்சி பிரம்மாண்டமாக இருந்தாலும் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சி மார்வல் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் சாயலில் உள்ளது.
மொத்தத்தில், அகத்தியா திரைப்படம் பேண்டஸி விரும்பிகளுக்கும், லாஜிக் பார்க்காமல் படம் பார்ப்பவர்களுக்கும் ஒருமுறை பார்க்கலாம் ரக திரைப்படம்.