விடாமுயற்சி வசூலை துவம்சம் செய்த ட்ராகன்.. வெளியில் தலை காட்ட தயங்கும் தல ரசிகர்கள்.. தூக்கிவிடுமா GBU


நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

ஆனால், வசூல் ரீதியாக இப்படம் படுதோல்வி அடைந்தது அஜித் ரசிகர்களை கடும் அப்செட்டில் ஆழ்த்தியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான 'டிராகன்' திரைப்படம் 'விடாமுயற்சி' படத்தின் மொத்த வசூலை விட அதிகமாக வசூல் செய்துள்ளது என்ற தகவல் திரை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அஜித்தின் 62வது படமான 'விடாமுயற்சி' சுமார் இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உருவாக்கப்பட்டது. லைகா நிறுவனம் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து தயாரித்த இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், அனிருத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்ததால், படத்தின் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.

இந்த படத்தின் ரிலீஸுக்காகத்தான் அஜித்தின் அடுத்த படமான 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட 'விடாமுயற்சி' பின்னர் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

ஆனால், 'விடாமுயற்சி' படம் வெளியாவதற்கு முன்பே லைகா நிறுவனத்திற்கு சுமார் 124 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. படம் வெளியான பிறகு வந்த ஷேர் வெறும் 14 கோடி ரூபாய் மட்டுமே என்றும், இதனால் மொத்த நஷ்டம் 110 கோடியாக உயர்ந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதுமட்டுமின்றி, 'விடாமுயற்சி' படத்தின் கதை பாரமவுண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'பிரேக் டவுன்' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதால், பாரமவுண்ட் நிறுவனத்திற்கு 17.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், இதனால் மொத்த நஷ்டம் 127.5 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

 படத்தின் உலகளாவிய மொத்த வசூல் 137.5 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான 'டிராகன்' திரைப்படம் 'விடாமுயற்சி' படத்தின் வசூலை விட அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான இந்த படம், கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, இயக்கம் என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. 

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 'டிராகன்' திரைப்படம் 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி அஜித் குமார் ரசிகர்களை சற்று அமைதியாக்கியுள்ளது. 

'விடாமுயற்சி' படத்தின் தோல்வியால் அப்செட்டில் இருந்த ரசிகர்கள் தற்போது கப்சிப் மோடில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் ரசிகர்களின் முழு நம்பிக்கையும் அவரது அடுத்த படமான 'குட் பேட் அக்லி' படத்தின் மீதுதான் உள்ளது. 

ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.