பிரிட்டனின் பர்மிங்காம் மருத்துவப் பள்ளியில் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் உடலை ஆய்வு செய்தபோது, அவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலை, ‘டிரிஃபாலியா’ எனப்படும் மிகவும் அரிய பிறவி குறைபாடாகும், இது உலகில் இரண்டாவது முறையாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதியவர் தனது உடலை அறிவியல் ஆய்வுக்கு தானமாக வழங்கியிருந்தார்,
மேலும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்த நிலையை அறியாமல் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். டிரிஃபாலியா, மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகளைக் கொண்ட ஒரு அசாதாரண நிலையாகும், இது முதன்முதலாக 2020ஆம் ஆண்டு ஈராக்கில் ஒரு மூன்று மாத குழந்தையிடம் கண்டறியப்பட்டது.
ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியான ஆய்வின்படி, இந்த முதியவரின் வெளிப்புற பிறப்புறுப்பு சாதாரணமாகத் தோன்றினாலும், உடற்கூறு ஆய்வில் இரண்டு சிறிய கூடுதல் ஆண்குறிகள் அவரது விதைப்பையில் மறைந்திருந்தது தெரியவந்தது.
இதில் ஒரு ஆண்குறி முதன்மை ஆண்குறியுடன் ஒரே சிறுநீர்நாளத்தைப் பகிர்ந்து கொண்டது, மற்றொரு ஆண்குறியில் சிறுநீர்நாளம் இல்லை. டிஃபாலியா (இரண்டு ஆண்குறிகள்) ஒப்பிடுகையில் சற்று பொதுவானது,
ஆனால் இதுவும் 5-6 மில்லியன் பேரில் ஒருவரை மட்டுமே பாதிக்கிறது, உலகளவில் 100 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. டிரிஃபாலியாவின் அரிதான தன்மையால், இதற்கு சரியான வகைப்பாடு தேவை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலை மறைந்திருக்கும் ஆண்குறிகளால் கண்டறியப்படாமல் இருக்கலாம், இதனால் இதன் பரவல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம். இந்த குறைபாடு சிறுநீர் பாதை தொற்று, விறைப்பு கோளாறு அல்லது கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என ஆய்வு கூறுகிறது.
இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால், தன் உடலை தானமாக வழங்கும் அளவுக்கு புரிதல் கொண்ட ஒரு நபர் தனக்கு மூன்று ஆண்குறிகள் உள்ள விஷயத்தை தெரியாமலே வாழ்ந்துள்ளார் என்பது தான் என்று ஷாக் ஆகிறார்கள் மருத்துவர்கள்.