சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் (27) மரண வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 28, 2025 அன்று, மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமி அளித்த 10 பவுன் நகை திருட்டு புகாரின் அடிப்படையில், அஜித்குமார் திருப்புவனம் காவல் நிலையத்தின் தனிப்படையால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது, அவர் கோயிலின் பின்புற மாட்டுத் தொழுவத்தில் கம்பு, பிளாஸ்டிக் குழாய் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு, வாயிலும் பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தடவப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் தீரன், மதுரை உயர் நீதிமன்றத்தில் அஜித்குமாரின் தரப்பில் வாதாடுகையில், நகை திருட்டு புகார் முற்றிலும் போலியானது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது வாதத்தின்படி, அன்றைய தினம் கோயிலில் நிகிதாவின் மாற்றுத்திறனாளி தாயாரை வீல்சேரில் அமரவைத்து, கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்ததற்காக, அஜித்குமார் 500 ரூபாய் கேட்டார்.
ஆனால், நிகிதா 100 ரூபாய் மட்டுமே தருவதாக கூறி, இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சிறிய மோதலை பயன்படுத்தி, நிகிதா தனது அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கை பயன்படுத்தி, அஜித்குமார் மீது திருட்டு புகார் புனையப்பட்டு, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் துணையுடன் அவரை காவல்துறையிடம் சிக்க வைத்ததாக தீரன் குற்றம்சாட்டுகிறார்.
நிகிதா, ஒரு யூடியூப் பேட்டியில், “எனது தாயுடன் ஸ்கேன் எடுக்கச் சென்றோம். ஸ்கேனிங் சென்டரில் நகைகளை கழற்ற வேண்டும் என்பதால், அவற்றை காரின் பின் இருக்கையில் உள்ள ஹேண்ட்பேக்கில் வைத்தோம்,” என்று கூறியுள்ளார்.
ஆனால், வழக்கறிஞர் தீரன், “நிகிதாவுக்கு ஸ்கேனிங் நடைமுறைகள் தெரிந்திருந்தும், வீட்டிலேயே நகைகளை கழற்றி வைக்காமல், காரில் வைத்ததாக கூறுவது, புகார் போலியானது என்பதை உறுதிப்படுத்துகிறது,” என்கிறார்.
மேலும், 500 ரூபாய் பிரச்சனையே இந்த கொடூரத்திற்கு காரணம் எனவும், நிகிதாவின் செல்வாக்கு மற்றும் ஐஏஎஸ் அதிகாரியின் துணையால் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் அவர் வாதிடுகிறார்.
மதுரை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் காவல்துறைக்கு கடும் கேள்விகளை எழுப்பியதுடன், அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்ததாகவும், “ஒரு கொலைகாரர் கூட இவ்வளவு காயங்களை ஏற்படுத்தியிருக்க மாட்டார்,” என்று அதிர்ச்சி தெரிவித்தது.
வழக்கறிஞர் ஹென்றி, அஜித்குமாரை தாக்கும் வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார், இது சம்பவத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டு, “இது மன்னிக்க முடியாத செயல்,” என்று கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணையில், நிகிதாவின் பின்னணி, அவரது 2011 மோசடி வழக்கு, மற்றும் ஐஏஎஸ் அதிகாரியின் பங்கு குறித்து உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English : The custodial death of temple guard Ajithkumar in Sivaganga has shocked Tamil Nadu. Allegedly beaten to death by police over a fabricated 10-sovereign jewelry theft complaint by Dr. Nikita, the case stems from a dispute over ₹500 for assisting Nikita’s mother. Naam Tamilar Party’s lawyer, Theeran, claims Nikita used political influence and an IAS officer’s support to frame Ajithkumar. The case is now under CBI investigation.