கன்னியாகுமரி மாவட்டம், குறுந்தன்க்கோடு அருகே ஆசாரி விளை கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் (90) மற்றும் லக்ஷ்மி தம்பதியருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என ஆறு பிள்ளைகள்.
பணையேறும் கூலித் தொழிலாளியான சந்திரபோஸ், தனது வருமானத்தில் குடும்பத்தைப் பராமரித்து, பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பிள்ளைகள் தங்கள் குடும்பங்களில் மூழ்கி, பெற்றோரை மறந்தனர்.

தாய்-தந்தையை கவனிப்பதில் பிள்ளைகளுக்கு இடையே போட்டி எழுந்தாலும், யாரும் முழுமையாக பொறுப்பேற்கவில்லை. ஆறு பிள்ளைகளும் மாதாமாதம் ஷிப்ட் முறையில் உணவு மட்டும் வழங்கினர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், வயது முதிர்வால் லக்ஷ்மி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். சந்திரபோஸ், தன்னால் முடிந்த வேலைகளுக்கு சென்று, மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்தார்.
ஆனால், மூன்று மாதங்களுக்கு முன், சந்திரபோஸின் இரு கண்களும் பார்வையிழந்தன. மனைவியை பராமரிக்க முடியாமல், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே வழியின்றி தம்பதியர் தவித்தனர். லக்ஷ்மியின் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு, வலியால் அவர் அலறினார்.
பிள்ளைகளின் புறக்கணிப்பால் மனமுடைந்த சந்திரபோஸ், மனைவியின் துயரத்தை தாங்க முடியாமல், விபரீத முடிவெடுத்தார். 2025 ஆகஸ்ட் மாதம், பார்வையற்ற நிலையில் தட்டுத்தடுமாறி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, படுக்கையில் கிடந்த லக்ஷ்மியின் கழுத்தை அறுத்து கருணைக் கொலை செய்தார்.
உணவு கொண்டு வந்த இளைய மகன் சாந்தகுமார், தாயின் உடலை இரத்த வெள்ளத்தில் கண்டு அதிர்ச்சியடைந்தார். சந்திரபோஸ், கண்ணீருடன் வாசலில் அமர்ந்திருந்தார்.
உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசாரிபள்ளம் காவல் நிலைய போலீசார், லக்ஷ்மியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சந்திரபோசை கைது செய்து, ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
செல்வமாக நினைத்து வளர்த்த ஆறு பிள்ளைகளால் கைவிடப்பட்ட இந்த முதிய தம்பதியின் சோகம், கருணைக் கொலையில் முடிந்தது. இந்தச் சம்பவம், பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளின் மனப்பான்மையை வெளிப்படுத்தி, பார்ப்போர் கண்களை கலங்க வைத்துள்ளது.
முதியோர் பராமரிப்பு குறித்த சமூகப் பொறுப்பை இந்த சோகம் மீண்டும் நினைவூட்டுகிறது.
Summary : In Kanyakumari, 90-year-old Chandrabose, abandoned by his six children, struggled to care for his bedridden wife Lakshmi. After losing his vision, unable to bear her suffering from painful sores, he mercy-killed her. Police arrested him, highlighting the neglect of elderly parents.


