சென்னை, செப்டம்பர் 25 : தமிழக சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் பீலா வெங்கடேசன் (56) கடந்த புதன்கிழமை மாலை மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது தினமும் மாலை வேளையில் தொலைக்காட்சிகளில் தோன்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரது பங்களிப்பு, தமிழக மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

தனது 56வது வயதில் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட மனமுறிவுகளையும், குணமடையாத நோயின் வலியையும் சகித்துக்கொண்டு, அமைதியாக வாழ்ந்து மறைந்த பீலா வெங்கடேசனின் உடல், கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள், அதிகாரிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேதருகே வாழையடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பீலா வெங்கடேசன், மறைந்த தமிழக டி.ஜி.பி. எல்.என். வெங்கடேசன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் தம்பதியரின் மகளாக செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தார்.
மருத்துவப் படிப்பை முடித்து, 1997ஆம் ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், பீலா ராஜேஷ் என்று பெயர் மாற்றிக்கொண்டார்.
இந்தத் தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர்; ஒருவர் திருமணமாகியுள்ளார், மற்றொருவர் வெளிநாட்டில் படித்து வருகிறார்.அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய பீலா, 2019ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கொரோனா தொற்றின் முதற்கட்டப் பரவலின்போது, அவர் முன்கையாளராக இருந்து, அரசு மருத்துவமனைகளையும், காய்ச்சல் கிளினிக்குகளையும் திறம்பட நடத்தினார். தினமும் மாலை வேளையில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தோன்றி, டயாபிடீஸ், ஹைப்பர்டென்ஷன் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவது, கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களைத் தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, அப்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சிறப்பாகக் கையாண்டு, தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.
இதன் மூலம் அவர் 'கொரோனா கால மக்கள் நாயகி' என்று புகழ்பெற்றார்.இதற்கிடையே, அவரது கணவர் ராஜேஷ் தாஸ், ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்ததால், பீலா அவரை விட்டுப் பிரிந்தார்.
அதன் பிறகு தனது பெயரை மீண்டும் பீலா வெங்கடேசன் என்று மாற்றிக்கொண்டார். பின்னர், தமிழக அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார்.கடந்த சில மாதங்களாகத் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த பீலா வெங்கடேசன், பரிசோதனையில் மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
உயிர்பிழைப்பு சாத்தியமில்லாத சூழ்நிலையிலும், அதை வெளிப்படுத்தாமல் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், தரமணியில் உள்ள தனிகார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லாமல், புதன்கிழமை மாலை அவரது உயிர் பிரிந்தது.குடும்ப வாழ்வில் ஏற்பட்ட மனமுறிவுகள், நெருக்கடிகள் என ஒருபக்கம்; குணமடையாத மூளைப் புற்றுநோயின் தீவிர வலி என மறுபக்கம் – இத்தகைய தீராத வலிகளை உடலிலும் உள்ளத்திலும் சுமந்து, அமைதியாக வாழ்ந்த பீலா வெங்கடேசனின் மறைவு, சுகாதாரத் துறை அதிகாரிகளிடையே ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உயிரிழப்புக்கு தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் அவரது சிறப்பான பணியை நினைவுகூர்ந்து, அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத் துறை அதிகாரிகள், உறவினர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பீலா வெங்கடேசனின் மறைவு, தமிழக நிர்வாகத்தில் ஒரு பெரிய இழப்பாக அமைந்துள்ளது.
Summary : Beela Venkatesan, 56, former Tamil Nadu Health Secretary and IAS officer, succumbed to brain cancer on Wednesday. Renowned for her frontline role during the initial COVID-19 wave, she delivered daily TV briefings, managed fever clinics, and enforced preventive measures effectively. Born to a prominent family, she overcame personal hardships like divorce while serving in key administrative roles until her illness worsened.

