சென்னை, அக்டோபர் 5 : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவஜோத் சிங் சித்து, தன் மனைவி நவஜோத் கௌரின் ஸ்டேஜ் 4 மார்பக புற்றுநோயை இயற்கை முறைகளால் முழுமையாக குணப்படுத்தியதாகக் கூறி தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
"மருத்துவர்கள் 3% உயிர் வாய்ப்பு மட்டுமே உள்ளதாகக் கூறியபோது, மஞ்சள், வேப்பிலை போன்ற இயற்கை பொருட்கள் தான் அற்புதத்தைச் செய்தன" என அவர் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார். இந்தக் கூற்றுக்கு பல புற்றுநோய் நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நவஜோத் கௌர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டேஜ் 4 மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றிய நிலையில், மருத்துவர்கள் "குணப்படுத்த முடியாது; உயிர் பிழைக்க வாய்ப்பு 3% மட்டுமே" எனக் கூறியதாக சித்து தெரிவித்தார்.
இருப்பினும், மனம் தளராமல், தன் மனைவியை அன்புடன் கவனித்துக்கொண்ட சித்து, இயற்கை முறைகளைப் பரிந்துரைத்தார். தினசரி எலுமிச்சை சாறு, மஞ்சள், வேப்பிலை, துளசி உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்து வந்ததாக அவர் கூறுகிறார். "ஒவ்வொரு நாளும் விடியும் போது, வேப்பிலை தண்ணீர் குடித்து அந்த நாளைத் தொடங்கினாள்" என உணர்ச்சிமிக்க கதையைப் பகிர்ந்தார்.
கடந்த செப்டம்பர் 21 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த சித்து, "என் மனைவி கேன்சரில் இருந்து முழுமையாகக் குணமடைந்தார். இது பணவசதி அல்ல, உணவு முறையால் நிகழ்ந்த அற்புதம்" எனத் தெரிவித்தார். "பால், சர்க்கரை போன்றவற்றைத் தொடவில்லை. மஞ்சள், வேப்பிலை போன்ற இயற்கைப் பொருட்கள் தான் குணமாக்கின" என அவர் பெருமையுடன் சொன்னார். இந்த வீடியோ X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் 36 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
மருத்துவ நிபுணர்கள்: "இது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை"
இந்தக் கூற்றுக்கு பல மருத்துவ நிபுணர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை அமைந்துள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெரால்ட் ஆனந்தராஜ் கூறுகையில், "ஸ்டேஜ் 4 கேன்சரில் இருந்து முழுமையான குணமடைவது மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது.
பல கேன்சர்களில், கீமோதெரபி, ரேடியேஷன் போன்ற முறையான சிகிச்சைகள் மூலம் உயிர் காலத்தை நீட்டிக்க முடியும். ஆனால், ஆல்டர்னேட்டிவ் மெடிசின்கள் மட்டும் ஸ்டேஜ் 4 நோயை குணப்படுத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை" எனத் தெரிவித்தார். "என் 20 ஆண்டுகால அனுபவத்தில், இத்தகைய மருத்துவ அற்புதங்களைப் பார்த்ததோ, கேட்டதோ இல்லை" என அவர் சேர்த்தார்.
சென்னை புற்றுநோய் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அனுஷா கூறினார், "மஞ்சள், வேப்பிலை, துளசி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால், கேன்சருக்கு இவை தான் தீர்வு எனக் கூறுவது தவறு. மெடிக்கல் மற்றும் அறுவை சிகிச்சைகள் அவசியம்.
உணவு முறை (டயட்) கீமோதெரபி, ரேடியேஷன் போன்ற சிகிச்சைகளுக்கு ஆதரவாகப் பெரும் பங்கு வகிக்கும். ஆனால், இவை மட்டும் போதாது. நோயாளிகள் இதை நம்பி சிகிச்சையைத் தவிர்க்கக் கூடாது" என எச்சரிக்கை விடுத்தார்.
டாட்டா மருத்துவமனை: 260 மருத்துவர்களின் கூட்டு எதிர்ப்பு
உலகப் புகழ் பெற்ற மும்பை டாட்டா மெமோரியல் மருத்துவமனையின் 260 புற்றுநோய் மருத்துவர்கள் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். "அறுவை சிகிச்சை, கீமோதெரபி தான் நவஜோத் கௌரை காப்பாற்றியது.
இத்தகைய முட்டாள்தனமான கூற்றுகளை யாரும் நம்ப வேண்டாம்" என அவர்கள் கண்டித்துள்ளனர். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரமேஷ், சித்துவின் வீடியோவில் நேரடியாக கமெண்ட் செய்து, "இது அறிவியல் எதிரானது" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
சித்து கூறுகையில், சிகிச்சை பாட்டியாளாவில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நடத்தப்பட்டது. மொத்த செலவு சில லட்சங்கள் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். இயற்கை மருத்துவம் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டாலும், "ஆங்கில மருத்துவம் இதை ஏற்க மறுக்கிறது" என அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சர்ச்சை, கேன்சர் சிகிச்சையில் இயற்கை முறைகளின் பங்கு குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. நிபுணர்கள், "உணவு முறை உதவியாக இருக்கலாம், ஆனால் அது தான் தீர்வு அல்ல" என்பதை வலியுறுத்துகின்றனர். சித்துவின் கூற்று உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, மேலும் விசாரணைகள் தேவைப்படுகிறது.
