“காட்டுப்பகுதியில் 19 வயசு மனைவியுடன்.. துண்டான அந்த உறுப்பு..” விசாரணையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..

செங்கல்பட்டு, நவம்பர் 19: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த 19 வயது இளம்பெண் மதுமிதாவை, ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரது கணவர் சரண் (24) கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண். இவர் அந்தப் பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர் என்றும், மதுராந்தகம் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரணுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 19 வயது மதுமிதாவுக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரத்தி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர்.

திருமணமான சில நாட்களிலேயே மதுமிதா ஒரு ஆண் நண்பருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண், "இனி அவனுடன் பேசக்கூடாது" எனக் கண்டித்துள்ளார்.

இதனிடையே திருமணமான 2 மாதங்களிலேயே சரண், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் கைகளை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பிணையில் விடுதலையானார்.

சிறையில் இருந்து வீடு திரும்பிய பின்னும் மதுமிதா ஆண் நண்பருடன் போனில் அடிக்கடி பேசி வந்ததை சரண் கவனித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 17) சரண், மனைவி மதுமிதாவை "அனந்தமங்கலம் மலைப்பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு போகலாம்" எனக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றார். வழியில் காலி கோயிலுக்கு சென்றுவிட்டு ஈஸ்வரன் கோயிலுக்கு போவோம் எனக் கூறி, புதர்கள் நிறைந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென மதுமிதாவின் கழுத்தை அறுத்தார். இரத்த வெள்ளத்தில் சரண் விழுந்த நிலையில், ஆத்திரம் தீரும் வரை கத்தியால் பலமாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. மதுமிதா துடிதுடித்து உயிரிழந்தார். இறந்ததை உறுதி செய்து கொண்ட சரண், அங்கிருந்து தப்பி சிலாவட்டத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.

நடந்ததை தாயிடம் கூற, அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்த போலீசார் சரணை கைது செய்து, கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அங்கு கொலை செய்ததை சரண் ஒப்புக்கொண்டார்.

மதுமிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சரண், "மனைவி ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரமடைந்தேன். அதனால் ரகசியமாக திட்டமிட்டு, மலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்தேன்" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், திருமணமான 4 மாதங்களுக்குள் கணவராலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பாக ஒரத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary in English : In Chengalpattu, 24-year-old rowdy Saran murdered his 19-year-old wife Madhumitha just four months after their love marriage. Suspecting her of talking to a male friend on phone, he took her to a deserted hill area near Madurantakam, slit her throat and hacked her to death with a knife. He confessed and was arrested.