விருதுநகர், நவம்பர் 23 : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் மந்திரிக்க சென்ற 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர், கூச்சலிட்டு தப்ப முயன்றதால் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 25) நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் (மந்திரவாதி) ஆக பணியாற்றி வருகிறார். இன்று மாலை நரிக்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார்.
அப்போது தனிமையில் இருந்த இளம்பெண்ணை அப்துல் அஜீஸ் திடீரென பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டு தப்பியோட முயன்ற போது, அப்துல் அஜீஸ் தன்னிடமிருந்த சிறிய கத்தியால் கழுத்து, கைகள் உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை குத்தியுள்ளார்.

வலியால் துடித்த இளம்பெண் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து மீண்டும் கூச்சலிட்டார். அவரது குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அப்துல் அஜீஸை மடக்கிப் பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த இளம்பெண் உடனடியாக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் எவ்வித தகவலும் வெளியிடவில்லை. நரிக்குடி போலீசார் அப்துல் அஜீஸை கைது செய்து, பாலியல் வன்கொடுமை முயற்சி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிவாசல் போன்ற புனித இடத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் நரிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



