மதுரை, நவம்பர் 7: மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக புகார். பள்ளி நிர்வாகம் புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பாதிக்கப்பட்ட மாணவிகள் நேரடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, காவல்துறை விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் மது அருந்துதல், பெற்றோர்களின் தவறான நடத்தை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை வெளிப்படுத்தியுள்ளது.மதுரை மற்றும் சுற்றுபகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த அரசு உதவி பெறும் பள்ளியில், ஆண் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நேரங்களில் மாணவிகளிடம் ஆபாசமான பேச்சு நடத்தி, தவறான வீடியோக்களை காட்டி தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தவறான இடங்களில் மாணவிகளை தொடுவது போன்ற நடவடிக்கைகளும் நடந்ததாக அவர்கள் கூறுகின்றனர். இந்தப் புகார்களைப் பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தபோது, எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.
மாறாக, தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், உதவி தலைமையாசிரியர் மாணவர்கள் இடையே பிரச்சினையை இரு தரப்பாக மாற்றி வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதனால், பள்ளிக்கு வருவதற்கு அச்சம் கொண்ட மாணவிகள், தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகினர்.
அங்கு அளிக்கப்பட்ட புகார் மனுவில், பள்ளியில் மாணவர்கள் மது அருந்திவிட்டு வருவதை ஆசிரியர்கள் கண்டுக்கொள்வதில்லை எனவும், சில பெற்றோர்கள் மாணவிகளிடம் ஆபாசமான முறையில் பேசுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி வளாகத்தை நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுப்பதால், வகுப்பறைகளில் பீடி, சிகரெட் துண்டுகள் கிடைப்பதாகவும், இது பள்ளி சூழலில் ஏற்படும் பாதிப்புகளை விளக்கியுள்ளனர்.இந்தப் புகாரை ஏற்று, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தினர் விரைவாக வழக்கு பதிவு செய்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகியோரை கைது செய்து, விரிவான விசாரணை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பள்ளி நிர்வாகத்தில் நிலவும் குறைபாடுகளையும் ஆழமாக ஆராய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம், அரசுப் பள்ளிகளில் பாலியல் சீண்டல் மற்றும் நிர்வாக பொறுப்பின்மை குறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும், பள்ளி செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.
Summary in English : In Madurai's Subramaniapuram government-aided school, a male teacher sexually harassed female students by showing obscene videos and inappropriate touching. Complaints to the headmistress were ignored, prompting girls to approach city police. The teacher, headmistress, and assistant were arrested amid revelations of campus alcohol use and parental misconduct.

