திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் இ.பி. கணேசன் (56) என்பவர் கடந்த அக்டோபர் 22-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கருதப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவரது மகன் மோகன்ராஜ் பொதட்டூர்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கணேசன் பெயரில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு உயிர் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தது தெரியவந்தது.

குடும்பத்தில் மொத்தம் 11 காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தன. இவை அவரது வருமானத்திற்கு ஏற்றவை அல்ல என்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்கிடம் புகார் அளித்தன.
இதன்பேரில் டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. செல்போன் தகவல்கள், நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கணேசனின் மகன்கள் மோகன்ராஜ் (26, சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்) மற்றும் ஹரிஹரன் (27, வாகன வாடகை தொழில்) ஆகியோர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
இவர்களுடன் நண்பர்கள் பாலாஜி (28), பிரசாந்த் (35), தினகரன் (43), நவீன் குமார் (27) ஆகியோர் சேர்ந்து கொலைக்கு உதவியுள்ளனர். முதலில் ராஜ நாகம் (கோப்ரா) ஒன்றை ராணிப்பேட்டை மாவட்டம் மோசூரில் இருந்து தினகரன் மூலம் பிடித்து வந்து தூங்கிக் கொண்டிருந்த கணேசன் மீது வீசினர். ஆனால் பாம்பு கடிக்காமல் சென்றுவிட்டது.
ஒரு வாரம் கழித்து கட்டுவிரியன் (கிரெய்ட்) பாம்பை பிடித்து வந்து கணேசனின் கழுத்தில் வீசினர். உடனடியாக கடித்த பாம்பால் கணேசன் உயிரிழந்தார். கணேசனுக்கு உதவி செய்யாமல், பாம்பை அடித்துக்கொன்று, போலீஸுக்கு தகவல் அளித்து இயற்கை சம்பவம் போல நடத்தினர்.
மருத்துவமனைக்கு தாமதமாக கொண்டு சென்றதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா அசோக்லா தலைமையிலான குழு, ஆறு பேரையும் கைது செய்தது.
விசாரணை தொடர்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண ஆசையில் சொந்த தந்தையை கொலை செய்த கொடூரம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : In Thiruvallur, Tamil Nadu, two sons, Mohanraj and Hariharan, plotted to murder their father Ganesan for over ₹3 crore in insurance payouts. They hired accomplices to release a venomous krait snake on him while sleeping, after a failed attempt with a cobra. Police arrested six men after a special investigation uncovered the planned murder.

