சேலம், டிசம்பர் 10 : சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவைச் சேர்ந்த பாரதி (வயது 32) என்ற டியூஷன் டீச்சர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிஇஓ உதயச்சரண் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாரதியின் தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவின் முக்கிய பிரமுகராகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகவும் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.

பிடெக் இன்ஜினியரிங் படித்த பாரதி, பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சேலம் திரும்பினார். திருமணமாகாமல் இருந்த அவர், சேலம் சங்கர் நகரில் உள்ள டியூஷன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சேலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்த தொழில் நிகழ்ச்சியில் பாரதியும், சேலம் நாழிக்கல் பட்டியைச் சேர்ந்த உதயச்சரணும் சந்தித்தனர். உதயச்சரண், சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் டியூஷன் தொடர்பான தகவல்களுக்காக பாரதியும், மருத்துவத் தகவல்களுக்காக உதயச்சரணும் பங்கேற்றனர்.
அப்போது அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.உதயச்சரணுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், பாரதி அவரை அதிகம் நேசித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்காக 10 பவுன் தங்கக் காப்பு ஒன்றை வாங்கி பரிசளித்தார்.
ஆனால், உதயச்சரண் அதை விற்று செலவு செய்துவிட்டதால், பாரதி கோபமடைந்தார். "நமது காதலின் சின்னமாக கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்தேன், அதை விற்றுவிட்டாயே" என வாக்குவாதம் செய்தார். இதனால் கடந்த மூன்று மாதங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே,உதயச்சரணின் தகாத உறவு அவரது மனைவிக்குத் தெரியவந்தது. அவர் கணவரை கண்டித்தார். ஆனால், உதயச்சரண் "பிரச்சினையை விரைவில் தீர்த்துவிடுவேன்" என சமாதானம் செய்தார். பாரதி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தினார். "எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும்போது எப்படி?" என உதயச்சரண் மறுத்தார். "உன் மனைவியை விவாகரத்து செய்து என்னை திருமணம் செய்" என பாரதி வலியுறுத்தினார்.
இதனால் அவர்களுக்கிடையே மோதல் அதிகரித்தது. இருப்பினும், உதயச்சரண் மனைவியை விவாகரத்து செய்வதாகக் கூறி பாரதியை சமாதானம் செய்து, அவருடன் நெருக்கமாக இருந்தார். சமீபத்தில் இருவரும் இரவு சினிமா நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பினர்.
பாரதி தங்கியிருந்த இடத்தில் மீண்டும் விவாகரத்து பேச்சு எழுந்தது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. உதயச்சரண் பாரதியைத் தாக்கி கீழே தள்ளினார். நிலைதடுமாறி விழுந்த அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினார். இதில் பாரதியின் பின்கழுத்து எலும்பு உடைந்து உயிரிழந்தார்.
அதிகாலையில் உதயச்சரண் தனது மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து பாரதியை சீலநாயக்கன் பட்டிக்குக் கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் பாரதியின் தாய் பத்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த உறவினர்கள், பாரதி கொலை செய்யப்பட்டதாகவும், அவரது நகைகள் திருடப்பட்டதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஹஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் காந்திபதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
பாரதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை உறுதியானது. இதையடுத்துஉதயச்சரணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டியூஷன் சென்டர் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளில் இன்னொரு நபர் சென்று வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதனை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Summary in English : In Salem, India, 32-year-old tuition teacher Bharathi was killed by her lover, Udayacharan, a 40-year-old hospital CEO with a wife and two children. Their affair turned violent over his refusal to divorce and marry her, culminating in a fight where he strangled her. Police arrested him after postmortem confirmed murder; relatives protested, and CCTV footage is under review.


