நாகப்பட்டினம்: திருமணமான முதலிரவில் மனைவியின் அனுமதியின்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கணவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தொழுதூர் உச்சிமேடு தெருவைச் சேர்ந்த பிச்சையன் மகன் ராஜ்குமார் (வயது 37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் குதம்பநயினார் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகள் நளினிக்கும் (வயது 26) கடந்த ஜூன் 27-ம் தேதி நாகை அருகே ஆலத்தம்பாடி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
12 பவுன் நகை உள்ளிட்ட சீர்வரிசையுடன் சிறப்பாக நடந்த இத்திருமணத்தில் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அன்றிரவு முதலிரவில் ராஜ்குமார், நளினியிடம் அனுமதியின்றி மிருகத்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, அச்சத்தில் மயக்கமடைந்த நளினியை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நளினியின் தாயார் பரமேஸ்வரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். "என் மகளை 'இது என்ன இப்படி இருக்கு.. அது என்ன இப்படி இருக்கு.. நீ பெண்ணே அல்ல' என அவமானப்படுத்தி, வக்கிர புத்தியுடன் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார்" என புகாரில் குறிப்பிட்டார்.

புகாரின் பேரில் நாகை எஸ்.பி. ஜவஹர் உத்தரவுப்படி, நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜ்குமாரை கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். கட்டிய மனைவியாக இருந்தாலும், அனுமதியின்றி பாலியல் உறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்பதால், இச்சம்பவம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Summary : In Nagapattinam, a groom named Rajkumar was arrested for allegedly subjecting his bride Nalini to assault without consent on their wedding night, causing injuries. The victim was hospitalized, and police acted on her family's complaint.

