தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி, போதிய வசதிகள் இல்லை எனக் கூறி வேலையை விட்டு விலக முடிவு செய்தனர்.
இதனால் ஏற்பட்ட பிரச்சினையில், கணவரின் கண் எதிரே அந்தப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் மற்றும் அவரது கணவர், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் வசிக்கும் முகமது மக்பூல் ஹுசைன் என்பவரால் இடைத்தரகராக ஏற்பாடு செய்யப்பட்டு, அரசர்குளம் பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர்.
இடைத்தரகர் முகமது மக்பூல் ஹுசைன், நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு இவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஆனால், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் போதுமானதாக இல்லாததாலும் தம்பதி வேலையை விட்டு விலக முடிவு செய்தனர்.
கேரளாவில் வேலை தேடிச் செல்ல திட்டமிட்ட அவர்கள், டிசம்பர் 15-ம் தேதி அரசர்குளத்திலிருந்து ஆட்டோவில் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இடைத்தரகர் முகமது மக்பூல் ஹுசைன் செல்போனில் தொடர்பு கொண்டு, வேலையை விட்டு விலக வேண்டாம் என மிரட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி, சிவந்திப்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு சிறார்களுடன் காத்திருந்தார். ஆட்டோ அங்கு வந்ததும், குவாரியில் பணம் திருடியதாக கூறி தம்பதியை இறக்கி, அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு கணவரை தாக்கி பிடித்து வைத்துவிட்டு, முகமது மக்பூல் ஹுசைன் உள்பட மூவரும் அந்தப் பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பல மணி நேரங்கள் துன்புறுத்திய பிறகு, இருவரையும் சாலையில் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தப்பி ஓடிய முகமது மக்பூல் ஹுசைன் மற்றும் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Summary in English : In Thoothukudi district's Srivaikuntam taluk, an Assam couple who quit their job at a hollow block factory were intercepted by broker Muhammad Maqbool Hussain and two minors. The husband was assaulted, and the wife was gang-raped in front of him in a secluded area. All three accused were arrested by police.


