அப்போவே நான் அதை பண்ணியிருக்கணும்.. என்னை வாழ விடுங்க.. நடிகை பாவனா கண்ணீர் பதிவு..

கொச்சி, டிசம்பர் 20, 2025: 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிசம்பர் 8 அன்று தீர்ப்பளித்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பிரபல நடிகர் திலீப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.

அதேநேரம், முதன்மை குற்றவாளி பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர், "நீதி இன்னும் முழுமையடையவில்லை. குற்றத்தை திட்டமிட்டவர்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர்" எனக் கூறி ஏமாற்றம் தெரிவித்தார். நடிகை பார்வதி திருவோத்து "நீதி எது?" எனக் கேள்வி எழுப்பி, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகை பாவனா (பாவனா மேனன்) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "நான் செய்த தவறு என்னவென்றால், எனக்கு எதிராக ஒரு வன்முறை நடந்தபோது உடனடியாக காவல்துறையில் புகார் அளித்து, சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னேறினேன்! அன்று நடந்த அனைத்தும் விதி என்று கூறி நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

பின்னர் வீடியோ வெளிவந்தபோது, காவல்துறையிடம் புகாரளிக்கவில்லை என்று என்னைக் குற்றம் சாட்டியவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது குற்றவாளி விடுவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார்.

உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ, இதுபோன்ற வக்கிரங்களைச் சொல்லி பரப்புபவர்களுக்கோ இந்த நிலைமை ஏற்படக்கூடாது! நான் பாதிக்கப்பட்டவளும் அல்ல, பாதிப்பில் இருந்து மீண்டவளும் இல்லை. நான் ஒரு எளிய மனிதி. என்னை வாழ விடுங்கள்." இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடம் ஆதரவையும் ஆறுதலையும் பெற்றுள்ளது.

பாவனா தனது போராட்டத்தில் தனிமையில் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மலையாள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நீதி குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

Summary : In the 2017 Malayalam actress assault case, actor Dileep was acquitted by the Ernakulam court due to lack of evidence, while six others received 20-year sentences. The verdict shocked many, prompting strong support for survivor Bhavana from actresses like Manju Warrier and Parvathy. Bhavana posted an emotional Instagram message expressing pain and seeking peace.