இன்ஸ்டாகிராமில் இன்பம் தேடி துன்பம் வாங்கிய சிறுமிகள்.. மாஸ்டர் கிரிமினல் சிக்கியது எப்படி..? பெற்றோர்களே உஷார்..

நாகர்கோவில், டிசம்பர் 07 : கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் போலி காதல் வலையில் விழுந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி அடையாளங்களுடன் செயல்பட்ட குற்றவாளியை கேரளாவில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் போலீசார்.

இந்த வழக்கில் மேலும் சில சிறுமிகள் ஏமாற்றப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மணவாளக்குறிச்சி அருகே உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அந்தப் பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்து வந்தார்.

கடந்த நவம்பர் 10-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், மாயமானார். பெற்றோர் தீவிரமாகத் தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் (நவம்பர் 11) வீடு திரும்பிய சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் காதலன் 'பீட்டர்' என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பைக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கண்ணீருடன் கூறினார்.

மேலும், தான் அணிந்திருந்த தங்கக் கம்மல் மற்றும் மோதிரத்தைப் பறித்துக் கொண்டு, அம்மாண்டி விளை பகுதியில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் சிறுமி தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான குற்றவாளியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்ஸ்டாகிராம் ஐடி டிஆக்டிவேட் செய்யப்பட்டிருந்ததால், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சிறுமியுடன் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், ஐஎம்இஐ எண் அடிப்படையில் தேடியபோது, அது தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள வீடொன்றில் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. டவர் லொகேஷன் மூலம் அங்கு விரைந்த போலீசார், வீட்டில் இருந்த பெண்ணிடம் விசாரித்தனர்.

விசாரணையில், குற்றவாளி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பணை பகுதியைச் சேர்ந்த 24 வயது பினு என்பவரும், டீ மாஸ்டராகவும் திருவிழா கடைகளில் குளுக்கோஸ் சர்பத் வியாபாரம் செய்பவருமானது தெரிய வந்தது. அவர் இன்ஸ்டாகிராமில் காதலித்த சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்து வந்து, அந்த வீட்டில் ஒரு நாள் தங்கியிருந்ததாகவும், பின்னர் சொந்த ஊருக்குச் சென்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

மேலும், பினுவின் புகைப்படத்தை போலீசாரிடம் வழங்கினார். இதையடுத்து, கேரளாவின் கட்டப்பணைக்கு விரைந்த போலீசார், அங்குள்ள விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் உதவியுடன் தேடுதல் நடத்தினர். நூற்றுக்கணக்கான விடுதிகள் உள்ள சுற்றுலாத் தலமான அங்கு, பினுவின் புகைப்படத்தை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த சில நிமிடங்களில், ஒரு விடுதி மேலாளர் தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற போலீசார், பினுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், பினு அழைத்து வந்த சிறுமி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த மற்றொரு இன்ஸ்டாகிராம் காதலி என்பது தெரிய வந்தது. இந்த சிறுமியை ஏற்கனவே பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ வழக்கில் சிக்கி, சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்திருந்தார் பினு.

ஜாமீனில் இருந்தபோது மீண்டும் அந்த சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு அழைத்து வந்திருந்தார். மேலும், போலி ஊர் பெயர்களுடன் 10-க்கும் மேற்பட்ட போலி இன்ஸ்டாகிராம் ஐடிகளை உருவாக்கி, பல சிறுமிகளை ஏமாற்றியது விசாரணையில் உறுதியானது.

கைது செய்யப்பட்ட பினுவை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் போலி அடையாளங்களுடன் செயல்படும் குற்றவாளிகளிடம் இருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை கண்காணித்து, இதுபோன்ற ஆபத்துகள் குறித்து முன்னெச்சரிக்கை செய்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary in English : A 17-year-old girl from Kanyakumari district was lured by her Instagram boyfriend, Peter (alias Binu), who promised marriage, took her to a lodge, raped her, and stole her jewelry before abandoning her. Police traced him via phone IMEI to Theni and arrested him in Kerala with another minor victim. He used fake IDs to deceive multiple girls. Charged under POCSO, he was jailed.