"சிறை" திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

1990களின் தமிழ்நாடு. கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு சமூகத்தில் பரவிய இஸ்லாமிய வெறுப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம், நீதி தாமதமாகும் அவலம் – இவையெல்லாம் பின்னணியில் நகரும் ஒரு சாலைப் பயணக் கதைதான் 'சிறை'.

வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு ஒரு கொலை குற்றவாளியை அழைத்துச் செல்லும் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு கதிரவன் (விக்ரம் பிரபு). அந்தக் கைதி அப்துல் ரவூஃப் (எல்.கே. அக்ஷய் குமார்). பஸ்ஸில் தொடங்கும் அந்தப் பயணம், இருவரின் வாழ்வையும் தலைகீழாக மாற்றிப்போடுகிறது.

கதிரவன் ஒரு நேர்மையான, கடமையுணர்வு மிக்க போலீஸ். மனைவியுடன் சின்னஞ்சிறு ஊடல்கள், நண்பர்களுக்காக அதிகாரிகளிடம் பேசும் தயக்கம் – இயல்பான வாழ்க்கை அவருக்கு. ஆனால் அப்துலை அழைத்துச் செல்லும் போது, பயணத்தில் நடக்கும் சில சம்பவங்கள் அவரை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

அப்துல் ஐந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதியாகச் சிறையில் வாடுகிறான். அவனுக்கு வக்கீல் இல்லை, பிணை இல்லை – காரணம், அவன் முஸ்லிம் என்ற ஒற்றைப் பெயர்.

அப்துலின் கடந்த காலம் ஃப்ளாஷ்பேக்கில் வருகிறது: சிவகங்கை கிராமத்தில் கலையரசி (அனிஷ்மா அனில்குமார்) என்ற இந்துப் பெண்ணுடனான அழகிய காதல், அந்தக் காதலுக்கு எதிராக நிற்கும் சமூக வெறுப்பு, அக்காவின் கொடூரமான கணவன் ரகு போன்ற வில்லத்தனங்கள். அப்துல் கொலை செய்தது யாரை? ஏன்? அந்தக் கொலை உண்மையிலேயே குற்றமா? இல்லை சமூக அநீதிக்கான எதிர்வினையா?

பயணத்தில் அப்துல் துப்பாக்கியுடன் தப்ப முயல்கிறான். கதிரவன் அவனைத் துரத்துகிறார். ஆனால் அப்துலின் கதையைக் கேட்கக் கேட்க, கதிரவனின் மனசாட்சி விழித்துக்கொள்கிறது. போலீஸ் கடமைக்கும் மனிதநேயத்துக்கும் இடையில் அவர் தவிக்கிறார்.

விசாரணை கமிஷன், நீதிமன்றக் காட்சிகள், கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸாரின் அன்றாடப் பிரச்னைகள் – எல்லாம் எதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளன. இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி முதல் சில காட்சிகளிலேயே "இது வேற லெவல்" என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார். ஒரு சண்டைக் காட்சி, அப்துலின் தப்பிக்கும் முயற்சி – இவை நம்மை ஆவலுடன் திரையில் ஒட்ட வைக்கின்றன.

விக்ரம் பிரபு இயல்பான நடிப்பால் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். கோபம், கருணை, கடமை – எல்லாவற்றையும் நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸில் அப்துலுக்காக அவர் செய்வது, போலீஸ் கடமை பற்றி "வகுப்பு" எடுப்பது – மாஸ்!

அக்ஷய் குமார் முதல் படமே என்று தெரியாத அளவுக்கு அப்துலாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள், காதல் சென்டிமென்ட், கோர்ட்டில் நீதிபதியிடம் பேசும் சீன் – செம! அனிஷ்மா கலைyarasiயாகக் கலக்கியிருக்கிறார்.

அவரின் தவிப்பு, காதலுக்காகப் படும் பாடு – டச்சிங். விக்ரம் பிரபுவின் மனைவியாக அனந்தா தம்பிராஜா கியூட். துணை நடிகர்கள் – மூணாறு ரமேஷ், நீதிபதி தேனப்பன், ரகு – அனைவரும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அந்தக் கால வேலூர் பஸ் ஸ்டாண்ட், சிவகங்கை கோர்ட், கிராமங்களைத் தத்ரூபமாகக் காட்டுகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்தை இன்னொரு லெவலுக்கு எடுத்துச் செல்கிறது. "மன்னிச்சிரு", "நீலோத்தி" பாடல்கள் அழகு. பிலோமின் எடிட்டிங் கச்சிதம்.

உண்மைச் சம்பவத்தைத் தழுவிய இக்கதை, போலீஸில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. எளியவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், நீதிபதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக்காட்டுகிறது.

வழக்கமான காமெடி, குத்துப்பாடல், ஹீரோயிசம் இல்லாதது படத்தைத் தரமாக்கியிருக்கிறது. பஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள், கோர்ட் சீன்கள் – விறுவிறுப்பு, எதார்த்தம்.

கதை, திரைக்கதை, நடிப்பு, சொல்லும் செய்தி – எல்லாமே நிறைவான 'சிறை' ஒரு உணர்ச்சிப் பயணம். போலீஸார், அவர்கள் குடும்பத்தினர் பார்த்து விக்ரம் பிரபுவைப் பாராட்டுவார்கள்.

"இப்படி ஒரு போலீஸ் இருந்தால் நல்லா இருக்கும்" என மக்களும் நினைப்பார்கள். 2025ஐ நல்ல சினிமாவுடன் முடிக்கும் ஒரு சிறந்த படம்! தவறவிடாதீர்கள்.

Summary : In 1990s Tamil Nadu, honest armed police constable Kathiravan (Vikram Prabhu) escorts murder accused Abdul (Akshay Kumar) from Vellore jail to Sivaganga court. During the bus journey, Kathiravan learns Abdul's interfaith love story and the injustice behind his prolonged detention, prompting him to fight for justice. A gripping, realistic drama based on a true incident.