காருக்குள் கருகிய 4 உடல்கள் தாயை கட்டிப்பிடித்த நிலையில் மகள்-மகன்! கொடூர மரணத்தில் மர்மம்!

நெல்லை மாவட்டத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 17, 2026 செவ்வாய்க்கிழமை காலை, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே, ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், பிரதான பாதையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில், இரண்டு பனைமரங்களுக்கு இடையே ஒரு கார் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வள்ளையூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காருக்குள் நான்கு சடலங்கள் மிகவும் எரிந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய நிலையில் இருந்தன. சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் தலைமையில் துப்பரியும் நாய் பிரிவு உள்ளிட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

காரின் இன்ஜின் எண் மற்றும் பதிவு எண் மூலம் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த முகமது ரபி (43), அவரது மனைவி சையது நஸ்ரீன் பாத்திமா (38), அவர்களது 17 வயது மகன் மற்றும் 15 வயது மகள் என அடையாளம் காணப்பட்டது. மகன் மற்றும் மகள் தாயை கட்டிப்பிடித்த நிலையில் தீயில் கருகியிருந்தது இதயத்தை நொறுக்கும் தகவலாக உள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் கூறுகையில், கார் தொட்டுப் பார்க்கும்போது இன்னும் வெப்பம் இருந்ததால், சம்பவம் காலையில் நடந்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

கார் எப்போது அந்த சாலையில் வந்தது, எப்போது தீப்பிடித்தது என்பதை அறிய, அருகிலுள்ள கட்டடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கிடைத்த ஆரம்ப தகவல்களின்படி, முகமது ரபி குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தங்கள் சொந்த வீட்டை விற்றுவிட்டு, நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததாகத் தெரிய வருகிறது. கடந்த மார்ச் 13ஆம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு வந்திருந்தனர்.

சம்பவத்துக்கு முந்தைய இரவு, ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவில் ரமலான் நோன்பின் 27ஆவது இரவான லைலத்துல் கத்ர் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். சஹர் உணவு முடித்த பின்னர் பள்ளிவாசலில் இருந்து கிளம்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசல் பகுதியினர் கூறுகையில், பார்வையற்ற பிச்சைக்காரர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உடைகள் தானமாக வழங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கார் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டு, பதிவு எண் கூட முழுமையாகத் தெரியாத அளவுக்கு எரிந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கார் நிறுத்தப்பட்ட விதம், இடம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இது வெறும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதுகின்றனர்.

கொலையா அல்லது குடும்பத்தினரே எடுத்த முடிவா (தற்கொலை) என இரு கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடன் தொல்லை உள்ளிட்ட பின்னணிகளும் ஆராயப்பட்டு வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடர்கிறது.

Summary : On March 17, 2026, a car was found completely burnt in a remote area near Aathangarai, Tirunelveli district. Four members of a family from Chennai – Mohammed Rafi, his wife, and their two children – were inside. The family had recently sold their house and was travelling after attending special prayers the previous night. Police are investigating the cause.