த.வெ.க ஆட்சி! ரூட்டை மாற்றிய விஜய்! மெகா திருப்பம்..

சென்னை: தனிப்பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) சார்பில் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வாதாட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று ஆளுநர் மாளிகையில் த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்டோர் சந்தித்து, தங்கள் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால் உடனடியாக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

வழக்கமாக, தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவரை ஆளுநர் அழைத்து பதவி ஏற்கச் செய்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்குவார். ஆனால், இந்த முறை ஆளுநர் தரப்பில் அத்தகைய அழைப்பு விடுக்கப்படவில்லை என்று த.வெ.க தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக த.வெ.க தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்துள்ளது. ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர்கள் மூலம் வழக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.கவுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ள நிலையில், ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவ முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஆர். பொம்மை வழக்கை முன்வைக்கும் திட்டம்

1989-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற எஸ்.ஆர். பொம்மை விவகாரத்தில், உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியது. பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகை தீர்மானிக்க முடியாது என்றும், அதை சட்டப்பேரவையில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

குதிரைப் பேரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து பொம்மை தொடுத்த வழக்கில், மீண்டும் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கி, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது.

இதே அடிப்படையில், த.வெ.கவும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. “ஆளுநர் மாளிகை சட்டப்பேரவையின் அதிகாரத்தை கையகப்படுத்த முடியாது. பெரும்பான்மையை சட்டப்பேரவையில் தான் சோதிக்க வேண்டும்” என வாதிடவுள்ளனர்.

விஜய்க்கு உடனடியாக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்க குறிப்பிட்ட கால அவகாசம் (சில மணி நேரங்கள் கூட) வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், இன்று நடைபெற இருந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. த.வெ.க தரப்பில், “ஆளுநரின் திடீர் நிலைப்பாட்டுக்கு எதிராக எஸ்.ஆர். பொம்மை உள்ளிட்ட முன்னுதாரண வழக்குகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதாடுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் வழக்கை ஏற்று உத்தரவு பிறப்பித்தால், அது தமிழக அரசியல் சூழலை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Tamilaga Vettri Kazhagam which secured single majority in the assembly has decided to approach the Supreme Court after the Governor did not invite its leader Vijay to form the government. The party will base its petition on the SR Bommai judgment and has received support from Congress.