சென்னை : வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா சுமார் 18,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வெற்றிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா கூறியதாவது: “எல்லோருக்கும் வணக்கம். வில்லிவாக்கத்தில் இப்போதுதான் வந்து என்னை எலக்சன் வின்னர் என்று டிக்ளேர் செய்தார்கள்.

சுமார் 18,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. தமிழக மக்களுக்கும், குறிப்பாக என் உறவுகளான அம்மாக்கள், தங்கைகள், இளைஞர்கள், தம்பிகளுக்கு நன்றி. எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பிரச்சாரமும், மக்கள் வைத்த நம்பிக்கையும் இந்த வெற்றியைத் தந்துள்ளது. தமிழகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”
மேலும் பேசிய அவர், “இன்னும் 20-25 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 40 தொகுதிகளுக்கு மேல் கவுண்டிங் நடைபெற்று வருகிறது. 100, 500, 1,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் போட்டி நடைபெறும் சூழலில் கடைசி சுற்று வரை காத்திருக்க வேண்டும். 11 மணி அல்லது 12 மணிக்கு முழு முடிவுகள் தெரியும்” என்றார்.
தனிப்பெரும்பான்மை உறுதி
தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை தெரிவித்தார். “நாங்கள் 118 இடங்களைத் தாண்டுவோம். ஹைப்போதெடிக்கல் கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. 11 மணிக்கு மேல் பேசலாம்” என்று கூறினார்.
அதிகாரிகளை மாற்றுவது குறித்த கேள்விக்குச் சிரித்தபடி பதிலளித்த அவர், பின்னர் விரிவாக பேசுவதாகத் தெரிவித்தார்.
கொளத்தூர் வெற்றி - மக்கள் எழுச்சி
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.எஸ். பாபு பற்றியும் ஆதவ் அர்ஜுனா புகழ்ந்தார். “2011-ல் திரு. முக. ஸ்டாலின் அவர்களுக்கு ஏஜெண்டாக இருந்தவர் வி.எஸ். பாபு. இன்று அதே தொகுதியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். இது ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் திரட்சியின் வெற்றி” என்றார்.
தொடர்ந்து அவர், “எங்கள் தலைவர் விஜய் அவர்கள் கொளத்தூருக்கு வந்தபோது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். அது பயங்கர வெற்றியாக அமைந்தது. ஆதிக்கவாதிகள் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்.
75 வருடம் கட்சியாக இருந்தாலும் சரி, 50 வருடம் ஆனாலும் சரி, 50,000 கோடி பணம் இருந்தாலும் சரி — சாமானிய மக்கள் நினைத்தால் எந்த ஆதிக்கத்தையும் தூக்கி எறிய முடியும். இன்று மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்ட நாள்” என உணர்ச்சி பொங்கக் கூறினார்.
இந்த வெற்றிகள் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தவெகவின் தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கை உறுதியாகி வரும் நிலையில், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன.
English Summary : Adhav Arjuna of Tamilaga Vettri Kazhagam won the Villivakkam constituency with a margin of 18,500 votes. He thanked voters, women, youth and party leader Vijay for their support. The party is confident of securing a majority to form the government. He described the Kolathur win as a result of public unity.
