கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி கிராமத்தில், 42 வயது பெண் ஒருவர் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் (50) என்பவர் திருச்சியில் பழக்கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சிவரஞ்சனி (42). இவர்களுக்கு வினோத் (20) என்ற மகன் உள்ளார்; அவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். திங்கள்கிழமை இரவு சிவரஞ்சனி வீட்டில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

அங்கே உறங்கிக்கொண்டிருந்த சிவரஞ்சனியை வீட்டுக்கு பின்புறம் உள்ள கரும்புத் தோட்டத்துக்கு இழுத்துச் சென்று, கைகளைக் கட்டி பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை சடலம் மீட்பு
செவ்வாய்க்கிழமை காலை வீடு திறந்து கிடப்பதைக் கண்ட உறவினர்கள், சிவரஞ்சனியை தேடியபோது, வீட்டைச் சுற்றி ரத்தம் சிந்திக் கிடந்ததைக் கண்டு, அதன்வழியே கரும்புத் தோட்டத்துக்குச் சென்றனர். அங்கு சிவரஞ்சனி கைகள் கட்டப்பட்டு, கழுத்து அறுபட்ட நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்தார்.

உடனடியாக குளித்தலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சி.பி. சக்கரவர்த்தி, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என். ஹரிகிருஷ்ணன் பிரசாத், குளித்தலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் தேடப்பட்டன. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நகை-பணம் அப்படியே – கொள்ளை நோக்கம் இல்லை

சிவரஞ்சனி அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகை, பணம் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால், கொலைக்கு பின்னால் கொள்ளை நோக்கம் இல்லை என போலீசார் உறுதி செய்துள்ளனர். சடலம் உடற்கூறாய்வுக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து சடலத்தை சுற்றி இருந்த தடயங்களை சேகரித்தனர். குளித்தலை போலீசார், அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

குளித்தலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் தகராறா? அல்லது குடுபோதையில் இருந்த நபர்கள் திட்டமிட்டு செய்த செயலா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கொடூர சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary : In Kulithalai area of Karur district, a 42-year-old woman named Sivaranjani was alone at home on Monday night. Unknown persons entered the house, took her to a nearby sugarcane field, and assaulted her. She was later found deceased in the field on Tuesday morning with injuries. Police confirmed no theft occurred as valuables remained untouched and are investigating the case from multiple angles.