நிர்மல் (தெலுங்கானா), மே 22 : வரதட்சணை மற்றும் சந்தேகம் காரணமாக மனைவியை கொலை செய்து, சடலத்தை நிர்வாண நிலையில் விட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போன்ற நாடகத்தை அரங்கேற்றிய கொடூர சம்பவம் தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மல் மாவட்டம், கானாபூர் நகரில் உள்ள சாந்திநகர் காலனியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும், 30 வயதான மௌனிகா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அருண் விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த மே 9-ம் தேதி தாய் வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படும் தனது மனைவி மௌனிகா காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதே நாளில் தர்லபஹாட் காட்டுப் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த உள்ளூர் மக்கள், நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தைப் பரிசோதித்து அது காணாமல் போன மௌனிகாவின் உடல் என உறுதி செய்தனர்.
விசாரணையில் முதலில் அருணின் மீதே சந்தேகம் எழுந்தது. அவரது செல்போன் பதிவுகள் மற்றும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அருணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அருண் மனைவியைத் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
கொலைக்கு பின்னணி
திருமணமான நாளில் இருந்து அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணைக்காக மௌனிகாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும், அருண் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட அருண், மே 9-ம் தேதி "வெளியே போகலாம்" என மௌனிகாவை நம்பவைத்து தர்லபஹாட் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்த பின்னர், சந்தேகத்தை திசை திருப்பும் வகையில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றது போல் நாடகம் ஆடியுள்ளார்.
மௌனிகாவின் உடைகளை அகற்றி, பிறப்புறுப்பை கால்களால் உதைத்து கடுமையாக வீங்கச் செய்து, தங்க நகைகளை எடுத்துச் சென்றது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் மௌனிகாவின் தங்க நகைகள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை மறைத்து வைத்துவிட்டு, மனைவி காணவில்லை என போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது.
பெற்றோரும் கைது
இந்த வழக்கில் அருணின் பெற்றோர்களான நல்ல ஸ்ரீநிவாஸ் மற்றும் தெள்ளி ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகள், பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Summary : In Nirmal district of Telangana, Arun from Kanapur reported his wife Maunika missing on May 9. Her body was later found in a forest area. Police investigation pointed to Arun, who accepted his role in the incident due to ongoing family issues over dowry and suspicion. His parents were also detained and some items were recovered.