திராவிட கட்சிகள் செய்த இந்த ஒற்றை தவறுதான் விஜயின் வெற்றிக்கு காரணம்! போட்டு உடைத்த பிரபல நடிகர்!

சென்னை: நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், தமிழக முதலமைச்சராக உயர்ந்துள்ள நடிகர் விஜய்யின் அரசியல் எழுச்சியை ஒப்புக்கொண்டாலும், அவரது சில ரசிகர்களின் அநாகரிகமான நடத்தை குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவிலுக்கு செல்லும் போது கூட குடும்பத்தினருடன் இருக்கும் போது “TVK” என்று கத்தி செல்வது போன்ற செயல்கள் தனது குடும்பத்தையே பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் போஸ் வெங்கட் பேசியதாவது, “நானும் என் குடும்பமும் கோவிலுக்கு போனால் கூட சிலர் அருகே வந்து காதுக்கு பக்கத்தில் ‘TVK’ என்று கத்திட்டு போறாங்க. இதெல்லாம் கேட்க நல்லா இருக்கா?” என்று கேள்வி எழுப்பினார்.

“தனிப்பட்ட முறையில் விஜய்யை இழிவாக பேசவில்லை”

விஜய்யின் அரசியல் பயணத்தை ஆரம்பம் முதலே விமர்சித்தவர்களில் ஒருவரான போஸ் வெங்கட், ஒரு காலத்தில் “அவரால் நான்கு சீட் கூட வெல்ல முடியாது” என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் தமிழக முதலமைச்சராக உயர்ந்ததை பார்த்து அதிர்ச்சியும் பிரமிப்பும் அடைந்ததாக முன்பு கூறியிருந்தார்.

இப்போதும் தொடர்ந்து தனது கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், “நான் எந்த இடத்திலும் விஜய்யை தனிப்பட்ட முறையில் இழிவாக பேசியதில்லை. அவருடைய கொள்கை இல்லாத அரசியல் தளத்தையே விமர்சித்தேன். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த நிலையும், இப்போது இருக்கும் நிலையும் பற்றிதான் கருத்து சொன்னேன்” என்றார்.

ரசிகர்கள் கொள்கை ரீதியாக வாதம் செய்யலாம், தர்க்கரீதியாக எதிர்க்கலாம் என்று கூறிய போஸ் வெங்கட், “ஆனால் அதை விடுத்து என் குடும்பத்தினரின் முன்னால் என்னை அவமானப்படுத்துவது, மனைவி-குழந்தைகள் குறித்து தவறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

குடும்ப பாதிப்பு: மனைவியின் எச்சரிக்கை

இந்த சம்பவங்கள் தனது குடும்பத்தையே பாதித்துள்ளதாக போஸ் வெங்கட் குறிப்பிட்டார். “இதைப் பார்த்து என் மனைவியே, ‘இனிமேல் நீ விஜய் பற்றியோ, தவெக பற்றியோ பேசாதே’ என்று சொல்கிறார்” என்று அவர் சொன்னார்.ஆனால், ஜனநாயக நாட்டில் தனக்கு கருத்து சொல்ல உரிமை இருப்பதாக வலியுறுத்திய அவர், “நான் ஏன் பேசக்கூடாது? இது ஜனநாயக நாடு. எனக்கு என் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது.

பேசக்கூடாது என்றால் நான் நாட்டை விட்டு போகணுமா? அது முடியாது. அதனால் நான் பேசுவேன். அதே நேரத்தில் அவர் செய்யும் நல்ல விஷயங்களை நான் பாராட்டவும் செய்கிறேன்” என்றார்.

இளைஞர் ஆதரவுக்கு திமுக-அதிமுக பொறுப்பு

திராவிடக் கட்சிகளின் மைனஸ் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்துள்ள பெரும் ஆதரவு குறித்தும் போஸ் வெங்கட் சுவாரஸ்யமான கருத்து தெரிவித்துள்ளார்.

“இன்று விஜய்க்கு இவ்வளவு பெரிய யூத் சப்போர்ட் இருக்கிறது என்றால், அதற்கு ஒரு காரணம் திமுகவும் அதிமுகவும் தான். அவர்கள் தங்களுடைய கொள்கைகளையும் அரசியல் புரிதலையும் இளைஞர்களிடம் சரியாக கொண்டு செல்லவில்லை” என்றார்.

கல்லூரி, பள்ளி நிலைகளிலேயே அரசியல் விழிப்புணர்வை உருவாக்கியிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், “மாணவர்கள் மத்தியில் தேர்தல் கலாச்சாரம் வளர்த்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.

கல்லூரிகளில் தேர்தல்கள் முறையாக நடந்திருந்தால், இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாக இருந்திருக்கும். அந்த வெற்றிடத்தில்தான் விஜய் போன்ற ஒருவர் மிக வேகமாக நுழைந்து பெரிய ஆதரவை பெற்றிருக்கிறார்” என்றார்.

சமூக வலைதளங்களில் விவாதம்

ஒருகாலத்தில் விஜய்யின் வெற்றியை சாத்தியமே இல்லை என்று நம்பிய போஸ் வெங்கட், இன்று அவரது எழுச்சியை ஏற்றுக்கொண்டு பேசுவதும், அதே நேரத்தில் ரசிகர்களின் சில செயல்களை கண்டிப்பதும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால் அது குடும்பத்தினரை அவமானப்படுத்தும் அளவுக்கு போகலாமா என்ற கேள்வியை இந்த பேட்டி மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்யின் TVK ஆட்சியின் தொடக்க காலத்தில் ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சி அதிகமாக இருப்பதும், எதிர்க்கட்சி ஆதரவாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பதும் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

English Summary : Actor-director Bose Venkat, a longtime critic of Vijay’s political journey, expressed disappointment over some fans’ repeated disruptive actions towards him and his family, even at temples. 

He clarified that he only critiqued the party’s ideology and governance, not Vijay personally, and affirmed his right to free speech while appreciating positive initiatives. He also highlighted the role of major Dravidian parties in creating space for Vijay’s youth support.