டெல்லி : பாஜக முன்னாள் தமிழக தலைவர் கே. அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவரை சந்தித்து தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கட்சியில் இருந்து சுமூகமாக விலக விரும்புவதாக தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (ஜூன் 2) டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது அண்ணாமலை ஒரு கடிதத்தை நித்தின் நடாவிடம் அளித்தார். இந்தக் கடிதத்தில்:
- கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் பதவி முடிந்த பிறகு, அமித் ஷா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
- மத்திய அல்லது மாநில அளவில் எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.
- சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தான் முன்வைத்த யோசனைகள், பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
என்ற உள்ளிட்ட பல்வேறு குறைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். மேலும், பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட மற்ற தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
அண்ணாமலையின் நிலைப்பாடு:
அண்ணாமலை தற்போது எந்தப் பதவியிலும் இல்லாததால், ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லை என்றாலும், ஒரு சாதாரண தொண்டராக இருக்கும் நிலையில் கட்சியில் இருந்து மனக்கசப்பு இல்லாமல், சுமூகமாக விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அவர் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நித்தின் நடா அண்ணாமலையை சமாதானப்படுத்த முயன்றார். மத்திய அளவில் பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
டெல்லி பயணம் முடிவு:
அண்ணாமலை அமித் ஷாவை சந்திக்கவில்லை. சந்திப்பு முடிந்ததும் அவர் சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.
தற்போது டெல்லி விமான நிலையத்தில் இருந்தார். செய்தியாளர்களை சந்திக்க அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தனது அடுத்தகட்ட நகர்வுகளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை புதிய மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி, பின்னர் அதை கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விவரங்கள் வெளியானவுடன் தொடர்ந்து பார்க்கலாம்.
English Summary : Former Tamil Nadu BJP leader K. Annamalai met BJP National President JP Nadda in Delhi and submitted a letter. He expressed his desire to leave the party on amicable terms due to lack of any significant role at state or central level after his tenure as state president ended. He also met BL Santhosh. He is expected to address the media in Chennai soon.