செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது கவிதா என்பவர், தனது கள்ளக்காதலுக்காக கணவருக்கு விஷம் கலந்த மது பாட்டில் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கணவர் சுகுமார் (27) உடன் அவரது நண்பர் ஒருவரும் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவிதா மற்றும் சுகுமார் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுகுமார் உள்ளூர் கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பம் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டது. இதனால் கவிதா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

வேலை இடத்தில் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டு, அது பின்னர் தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. கணவர் மது போதையில் இருந்த நேரங்களில், கவிதா தனது உடல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த உறவைத் தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த உறவு நாளுக்கு நாள் ஆழமடைந்ததால், கவிதாவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதை சுகுமார் சந்தேகித்து மனைவியை ரகசியமாக கண்காணித்தபோது, உண்மை வெளியானது.

இதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. கவிதா தனது உறவை கைவிட மறுத்து, “நான் உன்னுடன் வாழ மாட்டேன். எனக்கு அவர்தான் தேவை” எனக் கூறியதாகவும், இறுதியில் இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியதாகவும் தெரிகிறது. பிரிவுக்குப் பிறகும் கவிதா தனது உறவைத் தொடர்ந்தார்.
இந்த உறவைத் தொடர முடியாதபடி கணவர் தொந்தரவு கொடுப்பார் என அஞ்சிய கவிதா, கணவரை இல்லாதொழிக்க முடிவு செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார். முதலில் கூலிப்படையை அணுகியும், பணப் பிரச்சனை காரணமாக அது சாத்தியமாகவில்லை. பின்னர் தூக்க மாத்திரை உள்ளிட்ட வழிகளை யோசித்த கவிதா, கணவரின் மது பழக்கத்தைப் பயன்படுத்த முடிவு செய்தார்.
சம்பவம் எப்படி நடந்தது?
கவிதா, கணவரின் அண்ணன் மணியை அழைத்து ₹500 கொடுத்து இரண்டு குவார்ட்டர் மது பாட்டில்கள் வாங்கி வரச் செய்தார். ஒரு பாட்டிலை மணிக்கு கொடுத்துவிட்டு, மற்றொன்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அங்கு நீரழிவு நோயாளிகள் பயன்படுத்தும் ஊசியைப் பயன்படுத்தி, மது பாட்டிலில் ஆசிட் போன்ற விஷப் பொருளை செலுத்தினார்.

பின்னர் அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு சுகுமார் தங்கியிருந்த இடத்துக்கு சென்ற கவிதா, “உங்கள் நண்பர் ஒருவர் கொடுக்கச் சொன்னார்” எனக் கூறி பாட்டிலை வழங்கினார்.
ஏற்கனவே போதையில் இருந்த சுகுமார் அதை வாங்கி வைத்தார். ஆனால், அதை குடிக்கவில்லை. இந்த திட்டமும் தோல்வியடைந்து விட்டது என விரக்தியானார் கவிதா.
ஒரே நேரத்தில் இரண்டு பேர்..
அடுத்த நாள், மதியம் வேலை இடத்தில் சுகுமார் சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் மது அருந்தினார். அப்போது அவருடன் பணியாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிலால் என்பவரும் கொஞ்சம் கேட்டு அருந்தினார்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் உடல்நிலை மோசமடைந்தது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு ஹரிலால் மயங்கினார். சுகுமார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சுகுமாருக்கும் அதே அறிகுறிகள் தோன்றின. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், முதலில் ஹரிலால் பின்னர் சுகுமார் உயிரிழந்தனர்.
மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் உடலில் விஷப் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தம்பதியரிடையே அடிக்கடி சண்டை, பிரிவு உள்ளிட்ட பின்னணியைக் கண்டறிந்த போலீசார், கவிதாவை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.

விசாரணையில் கவிதா அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். தான் திட்டமிட்ட விதம், மது பாட்டிலில் விஷம் கலந்தது உள்ளிட்ட விவரங்களை வாக்குமூலமாக அளித்தார்.
எனினும், தனது கள்ளக்காதலன் யார் என்பதை மட்டும் அவர் வெளிப்படுத்தவில்லை. அவரது தொடர்பு மற்றும் இந்த சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், போலீசார் முழு விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
Summary in English : In Chengalpattu, Kavitha developed a close relationship with a colleague while her husband Sukumar struggled with drinking habits. Family disputes led to separation. She later provided him a liquor bottle containing a harmful substance. Sukumar shared it with his coworker Harilal at work. Both experienced severe health issues and passed away. Police investigation resulted in her statement.