கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஆவலஹள்ளியைச் சேர்ந்த கணேஷ் என்பவர், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 21 வயது யோகினி என்பவரை காதலித்து வந்தார்.
இரு தரப்பு பெற்றோர்களும் இந்தக் காதலை ஏற்க மறுத்த நிலையிலும், இருவரும் உறுதியுடன் திருமணம் செய்து கொண்டு மாலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர்.

திருமணத்துக்குப் பிறகு கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. வாக்குவாதங்கள் அதிகரித்ததால், கணேஷ் தனது மனைவி யோகினியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த யோகினி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி, தனது தாயார் கல்பனா வீட்டில் தங்கினார்.
மனைவி பிரிந்து சென்ற பிறகு, அவரை மீண்டும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள கணேஷ் பலமுறை முயற்சி செய்தார். செல்போன் மூலமாகவும், நேரில் சென்றும் சமரசம் பேச முயன்றார். ஆனால் யோகினி மீண்டும் அவருடன் வாழ மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், வேலை தேடிக் கொண்டிருந்த யோகினிக்கு கோலார் மாவட்டம் மாலூர் நரசாபுரா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அதற்காக அவர் மாலூர் பகுதிக்குச் சென்றிருந்தார். இந்தத் தகவலை அறிந்த கணேஷ் அங்கு சென்று யோகினியைச் சந்தித்து, “கடைசியாக ஒரே ஒரு முறை உன்னிடம் பேச வேண்டும்” எனக் கூறி அருகில் உள்ள மீண்டஹள்ளி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மறைவான பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேஷ், முன்னதாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகினியை சரமாரியாகக் குத்தினார். பலத்த காயமடைந்த யோகினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு கணேஷ் தனது மாமியார் கல்பனாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த கல்பனா உடனடியாக மாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கே மனைவி யோகினியின் சடலத்துடன் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்த கணேஷை கண்டனர். உடனடியாக, யோகினியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திலேயே இருந்த கணேஷை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் கணேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியையே, சமரசப் பேச்சுக்காக அழைத்துச் சென்று இவ்வாறு கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குடும்பப் பிரச்னைகள் மற்றும் உறவுகளில் ஏற்படும் மனக்கசப்புகள் எந்த அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறது.
English Summary : In a tragic incident in Malur, Karnataka, Ganesh from Aavalahalli had an argument with his 21-year-old wife Yogini at Mindahalli lake bund. The couple had married against parental wishes and were living separately due to ongoing disagreements. Yogini passed away at the spot. Ganesh was taken into custody by police and produced in court.